BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 23 January 2025

Jammu Mystery Deaths: 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்; தனிமைப்படுத்தப்பட்ட ஜம்மு கிராமம்

ஜம்முவின் பட்டால் கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த 200 பேர் ரஜௌரி நகருக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், புதிதாக சிசிடிவி கேமராக்களை நிறுவி மக்கள் நடமாட்டம் உற்றுநோக்கப்படுகிறது.

17 பேர் இறந்தது மட்டுமல்லாமல் 4 பேர் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இது புதுவித தொற்று நோயா? ஏதேனும் சதியா எனத் தெரியாமல் அதிகாரிகளும், அச்சத்தில் மக்களும் விழிபிதுங்கியிருக்கின்றனர்.

என்ன நடந்தது?

இந்த பிரச்னைகள் அனைத்தும் தொடங்கியது கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி. பட்டால் கிராமத்திலுள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மரணத்துக்கான காரணம் தேடி ஜம்மு காஷ்மீர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் குழம்பியிருக்கின்றனர். தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் 3 பேர் குழந்தைகள். அவர்கள் உடல் சோர்வுற்று, அடிக்கடி வாந்தியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Death (Representational Image)

அதிகாரிகள் பட்டாலில் உள்ள பாவோலி நீர்த்தேக்கத்தில் பூச்சி மருந்து கலக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். பூச்சி மருந்து தடயங்களும் கிடைக்கப்பட்டதாக கூறுகின்றனர். எனினும் உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை.

மத்திய அமைச்சர் ஜித்தேந்திரா சிங், லக்னோ அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) உள்ள நச்சுயியல் ஆய்வகம் இறந்தவர்களின் உடலில் நச்சு இருப்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அது எந்த வகை நச்சு என்பதைக் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. விரைவில் மரணங்களுக்கு பின்னிருக்கும் மர்மம் விலகும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அரசு நடவடிக்கைகள்...

குறிப்பிட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புடையவர்களுமாக 200 பேரை அதிகாரிகள் தற்காலிகமாக இடம் மாற்றியுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என தனிக்குழு இவர்களை 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.

நர்சிங் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள கிராமமக்கள் இருக்கும் இடத்துக்கு வெளியாட்கள் யாரும் வருகிறார்களா என கண்காணிக்க காவலர்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ரஜௌரி அரசு மருத்துவமனை

பட்டால் கிராமத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு. 1800 பேர் வசிக்கும் அந்த கிராம மக்கள்தொகையில் சரிபாதிபேர் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளனர்.

கிராமத்திலுள்ள பிறரது நடவடிக்கைகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். தினசரி தேவையான தண்ணீர் மற்றும் சமைப்பதற்கான பொருட்களை வழங்கி வருகின்றனர்.

பவோலி நீர்த்தேக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கூறியதென்ன?

முன்னமே குறிப்பிட்டதுபோல கிராமத்தின் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கின்றனர். கிராமத்தின் பாதுகாப்பட்ட மண்டலத்தில் யாரும் நுழையாத வண்ணம் பார்த்துக்கொள்ள காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பட்டால் கிராமத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தை கவனித்து வருகிறார். காவல்துறை உட்பட பல அரசு துறைகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொற்று நோயியல் நிபுணர்கள் இதுவரையிலான ஆராய்ச்சியில் மரணங்களுக்கு காரணம் பாக்டீரியாவோ, வைரஸ்களோ இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனினும் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

ஒமர் அப்துல்லா

200க்கும் மேற்பட்ட உணவு மற்றும் தண்ணீர் சாம்பிள்கள் நாடு முழுவதுமுள்ள வைரல் நுண்ணுயிர் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த மரணங்களைக் கண்டு பீதியடைந்துள்ள மக்களைச் சந்திக்க பட்டால் கிராமத்துக்குச் சென்றுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா. அவர் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அமைதிகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். விரைவாக மரணத்துக்கு பின்னிருக்கும் மர்மத்தைக் கண்டறிந்து, கிராமத்தைப் பழைய நிலைக்கு மீட்டெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies