Doctor Vikatan: தைராய்டு மற்றும் டிப்ரெஷனுக்காக கடந்த சில மாதங்களாக மாத்திரைகள் எடுத்து வருகிறேன். அதன் பிறகு என் உடல் எடை அதிகரித்துவிட்டது. உடல் எடை அதிகரிப்புக்கு மாத்திரைகள் காரணமாக இருக்குமா... இதற்கு முன் பல வருடங்களாக நான் ஒரே எடையில்தான் இருந்திருக்கிறேன். அதனால்தான் இப்படியொரு சந்தேகம் வருகிறது. என் சந்தேகம் சரியானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
நீங்கள் சந்தேகப்பட்டது உண்மைதான். சிலவகை மாத்திரைகள், மருந்துகள் உடல் எடையை அதிகரிக்கும் தன்மை கொண்டவைதான். 10 முதல் 15 சதவிகித எடை அதிகரிப்புக்கு ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் காரணமாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
உடல் எடையை அதிகரிக்கச் செய்கிற மருந்துகளில் முதலிடம் ஸ்டீராய்டு மருந்துகளுக்குத்தான். இன்சுலின் உள்பட, நீரிழிவுக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கலாம். மனநலனுக்காக எடுத்துக்கொள்கிற ஆன்டி டிப்ரெசன்ட், ஆன்டி ஆங்ஸைட்டிக்கான மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கலாம். இந்த வகை மருந்துகள் பசியை அதிகரிக்கச் செய்யும். அதனால் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் உடல் எடை அதிகரிக்கும். இன்னும் சில மருந்துகள், உணவுகளின் மீதான கிரேவிங்ஸை அதிகரிக்கக்கூடியவையாக இருக்கலாம். அதாவது இனிப்பு அல்லது உப்புத்தன்மையுள்ள உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடும் உணர்வை ஏற்படுத்தலாம்.
இன்னும் சில மருந்துகள், நாம் உடலியக்கத்தின் மூலம் எரிக்கும் கலோரிகளின் அளவைக் குறைத்துவிடும் தன்மை கொண்டவையாக இருக்கலாம். இன்னும் சில மருந்துகள் உடலில் நீர்கோக்கச் செய்யும் தன்மை கொண்டிருக்கும். அதனால் உடல் எடை அதிகரித்துக் காணப்படும். தைராய்டு மருந்துகள் இதற்கான உதாரணம்.
இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் எல்லோருக்கும் இப்படி உடல் எடை அதிகரிக்கும் என்று அர்த்தமில்லை. சிலருக்கு எடையில் மாற்றமில்லாமலும் இருக்கலாம். எனவே, இது போன்ற மருந்துகளை எடுக்கும்போது உடல் எடை அதிகரிப்பதாக உணர்ந்தால், உணவில் கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் சாப்பிடுவதைப் போலச் சாப்பிடாமல் கலோரிகளைக் குறைத்து எடுத்துக்கொள்ளலாம். உடல் ரீதியான இயக்கத்தை அதிகரிக்கலாம். அதையும் மீறி, மருந்துகள் எடுப்பதால் உடல் எடை அதிகரிப்பதாக உணர்ந்தால் மருத்துவரிடம் அது குறித்து ஆலோசித்து வேறு மருந்துகளைப் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.