BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 13 January 2025

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? - பாடி வழிபடவேண்டிய பாடல்

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த் தம். அதாவது, ‘மகிழ்ச்சி பொங்குதல்’, ‘பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு.

அவ்வகையில் நமக்குள் மகிழ்ச்சிப் பொங்கிப் பெருக வழிசெய்யும் அற்புத நாளாகத் திகழ்கிறது பொங்கல் பண்டிகை. இது, நம்மை வாழவைக்கும் இறைவனுக்கும் இயற்கைக் கும் நன்றிகூறி வழிபடும் திருநாளும் கூட!

கருப்பட்டிப் பொங்கல்!

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

புராணங்கள் தை முதல் நாளை மகரசங்கராந்தி எனப் போற்று கின்றன. சூரியன் - இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத் தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவ ராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரை வழிபடும் நாள் தைப்பொங்கல் திருநாள். 

ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்!

பொங்கல்

இதில், உத்தராயணப் புண்ணிய காலம் தொடங்குவது, தை மாதப் பிறப்பு அன்றுதான் (14.1.25 செவ்வாய்). இந்தத் தினத்தில் சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வார். தைப்பொங்கல் திருநாள் - இந்த வருடம் 14.1.25 செவ்வாய்க் கிழமை அன்று காலை 7:30 முதல்  8:30 மணி வரை அல்லது  காலை 10:30 முதல் 11:30 மணி வரை பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரமாகும். இயலாதவர்கள் நண்பகல் 12 முதல் 1 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்!

ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது பணியைத் தொடங்கும்போது, அவரை வாழ்த்தி வரவேற்பதாகவே, தமிழ் மாதத்தின் முதல் நாளில் சூரிய வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. இதனை மாத சங்கராந்தி அல்லது மாதப் பிரவேசம் என அழைப்பர். தை மாதத்தை மகர மாதம் என்பர். ஆகவே, இந்த நாளின் முதல் நாள்  மகரசங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளில் சூரியனுக்கும் உலாத்திருமேனியாக விளங்கும் சோமாஸ்கந்தர் அல்லது சந்திரசேகர மூர்த்திக்கும் அபிஷேக அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

அன்றைய தினம் பொங்கல் பானையில் அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன்  குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு  பெரியோரின்  ஆசிகளைப் பெற வேண்டும். 

பொங்கல்

சூரியதேவனை வணங்கும்போது 

ஓம் ஞாயிறே போற்றி

ஓம் ஆதித்யா போற்றி

ஓம் ஆதவா போற்றி

ஓம் பகலவா போற்றி

ஓம் பரிதி ஒளியே போற்றி

ஓம் கதிரோனே போற்றி

என்று போற்றி கூறி துதிப்பது மிகவும் விசேஷம்.

இங்ஙனம் வழிபடுவோருக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறை யும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமன்றி, பொங்கல் திருநாளில் ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்த நாளை மகிழ்ச்சியா கவும் அதே நேரத்தில் பொருள் அமைந்ததாகவும் ஆக்க நமது முன்னோர்கள் நம்மை பழக்கப் படுத்தியிருக்கிறார்கள்.

பொங்கல்

இந்த நாளில் முன்னோர்களைக் குறித்து தர்ப்பணம் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும். இந்நாளில் புண்ணிய நதிகளிலோ, கடலிலோ நாம், ஸ்நானம் செய்து தான தர்மங்களைச் செய்வதால், சிறந்த பலன்களை பெறலாம் என்கின்றன நீதி நூல்கள்.

வடமாநிலங்களில் சில பகுதிகளில், தை மாதம் முதல் நாளன்று, எமகண்ட நேரத்தில் காலன் பூஜை நடைபெறும். எமதருமனின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, மலர் சூடி, எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபடுவர். இதனால் எமபயம் நீங்கும், துர்மரணம் மற்றும் விபத்துகள் நிகழாது என்பது நம்பிக்கை. 

பொங்கல் திருநாளில் படிக்க வேண்டிய விசேஷ துதிப்பாடல்:

அடையபலம் மகான் அப்பய்ய தீட்சிதரால் இயற்றப்பட்டது ஆதித்ய ஸ்தோத்திர ரத்னம். இது 14 பாடல்களையும் ஒரு பலச்ருதியையும் கொண்டுள்ளது.  இதில் 12வது பாடல் சூரியனை சிவபெருமானின் வடிவமாகப் போற்றுகிறது. அதனை இங்கு காணலாம்.

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம்

ஆதித்யே மண்டலார்ச்சிக புருஷ

விபிதயா தியந்த மத்யாகமாத்மந்

யாகோபாலங்கனாப்யோ நயநபத ஜூஷா

ஜியோதிஷா தீப்யமானம்!

காயத்ரி மந்த்ர ஸேவ் யம் நிகில ஜநதியாந்

ப்ரேரகம் விச்வரூபம்

நீலக்ரீவம் திரிநேத்திரம் சிவம் அநிசம்

உமா வல்லபம் ஸ்ம்சிரயாமி

கருத்து: சூரியன் உருவில் விளங்கி ஒளிர்பவனும், உலக உயிர்களை தோற்றம் முதல் அழிவு வரை பேணி வளர்ப்பவனும், வேள்வித் தீயை ஒத்த தன் கண்களால் அனைத்து ஒளிகளையும் பிரகாசிக்கச் செய்பவனும், காயத்ரீ மந்திரத்தால் வணங்கப்படுபவனும், அறிவை இயக்குபவனும், உலகினை தன் வடிவாய்க் கொண்டவனும், நீலகண்டமும் மூன்று கண்களையும் கொண்டு உமையொருபாகனாக விளங்குபவனுமாகிய சிவபெருமானை இடைவிடாது சிந்திக்கிறேன்!

பொங்கல்

மாட்டுப்பொங்கல் வழிபாடு

தைப்பொங்கலுக்கு மறுநாள் (15.1.25) மாட்டுப்பொங்கல். உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! 

மகாலட்சுமி மட்டுமின்றி அனைத்துத் தெய்வங்களும் பசுவில் வாசம் செய்வதாக ஐதீகம்! எனவே, பசுவுக்கான அனைத்து வழிபாடுகளைச் செய்வது உத்தமம். பசுவுக்கு உணவளிப்பதும் அதனைப் பராமரிப்பதும் நம் பாவங்களை விலக்கி, சகல சௌபாக் கியங்களையும் தரும் என்பதை அறிந்து, வணங்குங்கள்!

மட்டுமன்றி அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

இந்தத் தினத்தில்  காலை நீராடுவதற்கு முன், பெண்கள் அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு (இருந்தால்) சென்று, அவர்களின் சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பச்சை சாதம் (வெற்றிலை பிழித்து கலந்தது), வெள்ளை சாதம், சிவப்பு சாதம் (குங்குமம் கலந்தது), மஞ்சள் சாதம் (மஞ்சள் கலந்தது), சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஐந்து விதமான அன்ன வகைகளை பிடிப்பிடியாக இலையில் வைத்துக் கடவுளை வேண்டுவது வழக்கம். 

இதுபோன்று சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்குத் தங்களால் இயன்ற பரிசுப் பொருட்களை அளித்து மகிழ்வது இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்!

பொங்கல்

காணும் பொங்கல்!

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அலைபேசியில் பேசி, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் சூழல் இது!  எனினும், இது போன்றவற்றிலிருந்து நாம் விடுபட்டு அன்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொள்ளுதல் மிகவும் முக்கியம். அதற்கான நாள்தான் காணும் பொங்கல் திருநாள். இந்த நாளில் குடும்பத்தார் அவர்களின் நெருங்கிய உறவினருடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா மையங்களுக்குச் சென்று, பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும்!



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies