வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட கீழ்ஆலத்தூர், நாகல் கிராமம் சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் விட்டல் குமார் (47).
பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த விட்டல் குமார், கடந்த டிசம்பர் 16-ம் தேதி மாலை, குடியாத்தம் - காட்பாடி சாலையிலுள்ள சென்னாங்குப்பம் சுடுகாடு அருகில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட விட்டல் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில், விட்டல் குமாருக்கும், தி.மு.க-வைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலா சேட் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது எனத் தெரியவந்தது.
ஊராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகள் மற்றும் ஊராட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் குறித்து அடிக்கடி மாவட்ட நிர்வாகத்திடம் விட்டல் குமார் புகார் தெரிவித்து வந்ததால் ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் தரப்பினர் விட்டல் குமாருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் கொலைச் செய்யத் திட்டம்தீட்டி பா.ஜ.க நிர்வாகி விட்டல் குமாரை இரும்பு ராடால் தாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாக வீசிச்சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்குத் தொடர்பாக தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான பாலா என்கிற பாலா சேட் (54), அவரின் மகன் தரணிகுமார் (28) மற்றும் கொலையை அரங்கேற்றிய நாகல் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26), கமலதாசன் (24) ஆகிய 4 பேரையும் எஸ்.பி தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் மீது ஏற்கெனவே கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகளும், புகார்களும் நிலுவையில் இருக்கின்றன.
தொடர்ச்சியான குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டு வருவது தெரியவந்ததையடுத்து, பாலா சேட் உட்பட பா.ஜ.க நிர்வாகி கொலை வழக்கில் கைதான 4 பேரையும் `குண்டர்’ தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் அவர்களின் சிறைக் காவலை மேலும் ஓராண்டு நீட்டித்து உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் எஸ்.பி மதிவாணன் பரிந்துரைச் செய்தார். இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜன.8-ம் தேதி) உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார். மேலும், ``இதுபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் எஸ்.பி மதிவாணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.