மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கலகலத்துப்போய் இருக்கிறது. பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் நடந்தது. இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தார். இதில் பேசிய அமித் ஷா, ''மகாராஷ்டிராவில் பா.ஜ.க பெற்ற வெற்றியால், துரோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சரத் பவார் 1978ம் ஆண்டு துரோகத்தை தொடங்கி வைத்தார்.
மக்கள் அதனை 20 அடி ஆழத்தில் புதைத்துவிட்டனர். 1978ம் ஆண்டில் இருந்து மகாராஷ்டிரா அரசியல் நிலையற்றதாக இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் நிலையான அரசை கொண்டு வந்திருக்கிறார்கள். உத்தவ் தாக்கரே எங்களுக்கு துரோகம் செய்தார். 2019ம் ஆண்டு பால் தாக்கரேயின் கொள்கையை அவர் கைவிட்டார். இன்றைக்கு மக்கள் அவருக்கான இடத்தை காட்டி இருக்கிறீர்கள். உத்தவ் தாக்கரே துரோகத்தின் மூலம் முதல்வரானார். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரையிலான பா.ஜ.கவின் வெற்றிக்கு கட்சி தொண்டர்களாகிய நீங்கள்தான் காரணம். யாரும் மீண்டும் துரோகம் செய்யத் துணியாதபடி பா.ஜ.க-வை வெல்ல முடியாததாக மாற்ற வேண்டும்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க பெற்றுள்ள வெற்றி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி, இரண்டு டஜன் கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தது. உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது. மகாராஷ்டிரா கூட்டுறவுத்துறையில் சரத் பவார் மிகப்பெரிய தலைவர். அவர் வேளாண் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் அவரால் விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை'' என்றார். இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நிதின் கட்கரி மற்றும் மாநில அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
1978ம் ஆண்டு வசந்த்தாதா பாட்டீல் அரசில் இருந்து 40 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி முதல்வரானார். அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்ட சரத் பவார் 1999ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். 2023ம் ஆண்டு சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் அதே துரோகத்தை சரத் பவாருக்கு செய்தார். 2023ம் ஆண்டு அஜித் பவாரும் 40 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியில் சென்று பா.ஜ.க வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து துணை முதல்வரானார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 2022ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே கணிசமான எம்.எல்.ஏ.க்களை பிரித்துக்கொண்டு வெளியில் வந்து ஒட்டுமொத்த சிவசேனாவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.
இப்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னம் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரிடம் இருக்கிறது. பிரிந்த சிவசேனா இனி ஒன்று சேருமா என்று தெரியவில்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு அணிகளையும் ஒன்று சேர்க்க அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்பங்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சரத் பவாரிடம் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அஜித் பவார் அணிக்கு செல்ல ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் சரத் பவார் மட்டும் இன்னும் முழுமையாக இணைப்புக்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.