தபேலா வித்வான் ஜாகீர் உசைன் காலமானார்.
73 வயதான இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதயம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டு சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக ஐ.சி.யூ-வில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
தபேலாவில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஜாகீர் உசைன்தான் இன்ஸ்பிரேஷன். அப்படியான அளப்பரிய பங்களிப்பு அவருடையது. ஜாகீர் உசைன் தன்னுடைய 7 வயதிலேயே தபேலா வாசிக்கத் தொடங்கிவிட்டார். மேலும், 12 வயதில் உலகின் பல மேடைகளுக்குச் சென்று தன்னுடைய இசைப் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
பல இந்தியத் திரைப்படங்களுக்கும் சர்வதேச திரைப்படங்களுக்கும் மிக முக்கியமான பங்களிப்பை இவர் கொடுத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன் குடும்பத்துடன் சான் ஃபிரான்சிஸ்கோவில் குடிபெயர்ந்தார். அங்கும் பல இசை மேடைகளில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார் ஜாகீர் உசைன். கடந்த 1988-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருதையும், 2002-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், கடந்த 2023-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை பெற்றார். இதுமட்டுமல்ல, இசைத்துறையில் மிக முக்கியமான விருதாக கருத்தப்படும் சங்கீத நாடக அகாடமி விருதையும் இவர் பெற்றிருக்கிறார். இசை உலகில் முக்கிய விருதான கிராமி விருதுக்கு 7 முறை நாமினேட் செய்யப்பட்டு, 4 முறை வென்றிருக்கிறார்.
போய் வாருங்கள் ஜாகீர் உசைன்!