பாலஸ்தீன் கைப்பை சர்ச்சை
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி எடுத்துச் சென்ற 'பாலஸ்தீன்' என எழுதப்பட்ட கைப்பை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு பாஜக-வினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், இது `வகுப்புவாத நடவடிக்கை’ எனக் கூறியுள்ளனர்.
பிரியங்கா காந்தி தொடர்ந்து காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடக்கும் போர் வன்முறைக்கு எதிராக குரலெழுப்பி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் காசா மக்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் கொடுமைகளை `மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்’ என விமர்சித்திருந்தார்.
பாலஸ்தீன தூதரக பிரதிநிதி அபேத் எல்ராசெக் அபு ஜாசரை சந்தித்த பிரியங்கா காந்தியின் நிலைப்பாடு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. அபு ஜசார், பிரியங்காவின் வயநாடு தொகுதி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பாலஸ்தீன பிரச்னையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை எளிதாக்க இந்தியா முன்னின்று உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜகவினர் விமர்சனம்
"இந்த பைதான் அவரது நிலைப்பாடா? அவர் ஏன் வங்காள தேச இந்துக்கள் விஷயத்தில் வாய்த்திறக்கவில்லை? இது மிகப் பெரிய கேள்விக்குறி" என விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர்.
"இது இந்திய நாடாளுமன்றம். உறுப்பினர்கள் நாட்டு மக்களின் பிரச்னைகளை பேசவே நாடு முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சியினர் கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றம் செயல்பட விடவில்லை. முதலில் அசாதுதீன் ஓவைசி 'ஜெய் பாலஸ்தீன்' கோஷத்தை எழுப்பினார், இப்போது பிரியங்கா காந்தி பாலஸ்தீன பையை எடுத்துவந்துள்ளார்" என அவர் கூறினார்.
பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா, " பிரியங்கா காந்தியை தீர்வாக எண்ணிய காங்கிரஸ்காரர்களுக்கு நாடாளுமன்றம் முடிவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்..." என பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி எதிர்வினை
விமர்சனங்களுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் பிரியங்கா காந்தி. "வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் கொடுமைகளுக்கு ஏதாவது செய்யச் சொல்லுங்கள், வங்காள தேச அரசிடம் பேசுங்கள், முட்டாள் தனமான விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார் பிதியங்கா காந்தி.
இந்த சச்சரவுகளை 'பயனற்ற விஷயங்கள்' எனக் கூறிய பிரியங்கா, "வங்கதேசம் குறித்து பேசுங்கள், எனது கைப்பை பற்றி அல்ல" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளரிடம் பேசிய அவர், "யார் முடிவு செய்வது நான் என்ன ஆடை அணிய வேண்டுமென்று. ஒரு பெண் என்ன அணிய வேண்டும் எனக் கூறுவது முழுமையான ஆணாதிக்கம்" எனக் கூறினார்.
பாலஸ்தீன் உடன் இந்தியாவின் உறவு
இந்தியா அரசு நீண்ட நாட்களாக இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னைக்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்துள்ளது. அதன்படி சுதந்திரமாக பாலஸ்தீன அரசும் இஸ்ரேல் அரசும் செயல்பட வேண்டும்.
இதையே சில நாட்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் உறுதிபடுத்தியிருந்தார். இந்தியா காசாவுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
1974 முதல் சுமார் 50 ஆண்டுகாலம் இந்தியா-பாலஸ்தீன் உறவு நீடித்து வருகிறது. பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/SeenuRamasamyKavithaigal