வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
ஒருவரின் முகம் அழகாகத் தெரிவதற்குக் காரணம், அவருடைய மூக்கு. முகத்தின் நடுப்பகுதியில் இருப்பதால், ஒருவருடைய 'சென்டர் ஆஃப் அட்ராக்சன்' மூக்கு தான்.
திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்கையில்,'பொண்ணு, மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கா...'என்கிறோம்.
முகத்தை அழகுபடுத்திக் கொள்ள, காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் முதல் சாய்ஸ், மூக்கு தான்.
மூக்கு, ஒருவரின் அடையாளம். முகத்தின் கேடையம்.
சில மாதங்களுக்கு முன்பு, என்னைப் பார்க்க வந்திருந்த இளம்பெண் ஒருவர், 'என்னுடைய மூக்கு, எல்லோரைப் போலவும் இல்லை. சற்றே வளைந்திருக்கிறது' என்றார். மேலும், 'இதை சரிசெய்ய எங்கே சென்றாலும் என்னுடைய மூக்கு நன்றாகத் தான் இருக்கிறது என்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் எந்நேரமும் என்னுடைய மூக்கைப் பற்றியே சிந்திக்கின்றேன். இதனாலேயே நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன்...' என்றார்.
அவரைப் பரிசோதித்து பார்த்ததில், 'Body Dysmorphic Disorder' எனும் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உடல் உறுப்புகளின் வெளித்தோற்றத்தில், ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக நம்புவார்கள். பெரும்பாலும் அதில் சிக்கிக் கொள்வது மூக்கு தான்!
அதீத மன அழுத்தத்தில் இருப்போர், நுகரும் தன்மையை இழக்கின்றனர்.
கஞ்சா, கொக்கைன் போன்ற போதை வஸ்துக்களுக்கு, மூக்கே நுழைவுவாயிலாக செயல்படுகிறது.
அல்ஜைமர் நோயால் (Alzheimer's Disease) பாதிக்கப்படுபவர்கள், நினைவிழத்தலுடன் நுகரும் சக்தியையும் இழக்கின்றனர்.
'Rhinotillexomania' என்றொரு பிரச்சினை இருக்கிறது. பெயர் பெரிதாக இருப்பதால், ஏதோ உயிரைக் கொல்லும் பெரிய நோய் என நினைத்துவிட வேண்டாம். அடிக்கடி மூக்கை நோண்டுவதைத் தான் இப்படிச் சொல்கிறார்கள். தனித்த மனநோய் என்கிற அந்தஸ்தை இன்னும் இது பெறவில்லை (உங்கள் மூக்கிலிருந்து கையை எடுங்கள் ப்ளீஸ்!).
மாவீரர் நெப்போலியன், 'நீளமான மூக்குடையவர்கள், நேர்மையாக இருப்பார்கள்' என நம்பினார்! அவருடைய படையில் சேர, நீளமான மூக்குடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
மூக்கோடு மூக்கு உரசி, பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்திக் கொள்வது சில இனக்குழுவினர்களின் வழக்கம்.
பண்டைய இந்தியாவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட, 'மூக்கறுப்பு' சம்பவமெல்லாம் அரங்கேறியிருக்கிறது. அறுபட்ட மூக்கை சரிசெய்து கொள்ள, மெழுகாலான மூக்கை மக்கள் பயன்படுத்தினர்!
அவ்வளவு ஏன்? சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் அறுக்கப் போய்தானே ராமாயணம் என்கிற இதிகாசமே துவங்குகிறது!
இப்படி, வரலாறு நெடுகிலும் மூக்கைப் பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும் நிறையவே இருக்கின்றன.
மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர், 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' என்கிற சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஏழை சமையல்காரன் ஒருவனுக்குத் திடீரென மூக்கு வளர்கிறது. வளர்கிறது என்றால், வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவன் மூக்கைப் பார்க்க, மக்கள் கூடுகின்றனர். அனைவரிடமும் பணம் வசூலிக்கப்படுகிறது. விரைவிலேயே அவன், பிரபலம் ஆகிறான். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் விருந்தினராக அழைக்கப்படுகிறான். அரசியல் கட்சிகள் அவன் ஆதரவை வேண்டி, வரிசைகட்டி நிற்கின்றன. இதனையடுத்து, அவன் சந்திக்கும் களேபரங்கள் தான் மீதிக்கதை.
பஷீரின் கதைகளில் வரும் அரசியல் நையாண்டிகள் தனித்துவமானவை. அதன் மூலம், எளிய மக்களை சிந்திக்க வைத்தவர் அவர். 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' சிறுகதையும் அவ்வாறு எழுதப்பட்டதே!
இதேபோல, உக்ரைனிய எழுத்தாளரான நிக்கொலாய் கோகல் (Nikolai Gogol) எழுதிய, 'The Nose' சிறுகதையும் பிரபலமான ஒன்று. அது, தொலைந்து போன தன்னுடைய மூக்கை ஒருவன் தேடும் கதை. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், இக்கதை பற்றி இலக்கிய உரை ஒன்று நிகழ்த்தியிருக்கிறார்.
1940 ஆம் ஆண்டு, பினோச்சியோ (Pinocchio) என்கிற அனிமேஷன் திரைப்படம் வெளியானது. இது, இத்தாலிய எழுத்தாளரான கார்லோ கொலோடி (Carlo Collodi) என்பவர் எழுதிய, 'தி அட்வென்சர்ஸ் ஆப் பினோச்சியோ (The Adventures of Pinocchio)' என்கிற சிறார் கதையின் தழுவல்.
பினோச்சியோ என்பவன், மரத்தால் ஆன ஒரு பொம்மை. அவனுக்கு திடீரென உயிர் வருகிறது. இருப்பிடத்திலிருந்து பிரிந்து காட்டுக்குள் செல்லும் பினோச்சியோவின் மூக்கு, ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போதும் வளர்கிறது. அதன்மூலம் அவன் சந்திக்கும் சவால்கள் தான் கதை.
இத்திரைப்படம் வெளியான காலத்தில், பொய் சொன்னால் நம்முடைய மூக்கும் வளர்ந்து விடுமோ என்கிற பயத்தால், பல குழந்தைகள் பொய் பேசாமல் இருந்ததாக தகவல்கள் இருக்கின்றன!
சுவாசிப்பதைத் தாண்டி நம் மூக்கின் முக்கிய வேலை, நுகர்வது. ஹெலன் கெல்லர், ஒருவரின் வாசனையை வைத்தே அவருடைய தொழிலைக் கண்டுபிடித்து விடுவார் என்பார்கள்.
வாசனை, நம் நினைவுகளோடு தொடர்புடையதும் கூட. அதனால் தான் எவ்வளவு தூரம் சென்றாலும், அம்மா வைக்கும் மிளகு ரசத்தின் வாசனை நம்முடனே வருகிறது.
வியர்வையின் வாசம், அப்பாவின் உழைப்பை நினைவு படுத்தும்.
மல்லிகையின் வாசம், மனைவியின் அன்பை நினைவு படுத்தும்.
பீடியின் வாசம், இறந்துபோன தாத்தாவை நினைவு படுத்தும். மாத்திரைகளின் வாசம், பாட்டியின் கேன்சரை நினைவு படுத்தும்.
கணவனின் சாராய வாசத்தோடு தான், இங்கு பல படுக்கைகள் பகிரப்படுகின்றன.
கூலியின் சாக்கடை வாசத்தோடு தான், இங்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
என் நண்பர்கள் சிலர், என்னிடம் 'ஹாஸ்பிட்டல்' வாசனை வருகிறது என சற்று தள்ளியே நிற்பார்கள். அதற்காக எவ்வித நறுமணப் பொருட்களையும் இதுவரை நான் பயன்படுத்தியது இல்லை. அது, என் பணியின் அடையாளம். பெருமையுடன் மீண்டும் ஒருமுறை முகர்ந்துகொள்வேன்.
-சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.