அரசியலமைப்பு சட்ட மாற்றம்...?
நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துவரும் குளிர்கால கூட்டத்தொடரில், 75 ஆண்டுக்கால அரசியலமைப்பு சட்டத்தின் பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி, "நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், 'இந்தியா 1947-ம் ஆண்டு பிறந்தது என்றோ, ஜனநாயகத்தை 1950-ம் ஆண்டு அடைந்தது என்றோ' நினைக்கவில்லை. இதற்கு, அவர்கள் இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் தெரிந்திருந்ததே காரணம். அவர்களால் இந்தியாவின் கடந்த ஜனநாயக வரலாறு உலகிற்கு தெரிந்தது. அதனால் தான், இப்போது இந்தியா 'ஜனநாயகத்தின் தாயாக' திகழ்கிறது. நம் நாடு பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல...ஜனநாயகத்தின் பிறப்பிடம்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும்போது, அதை பலப்படுத்த பெண்கள் முக்கிய பங்கு ஆற்றியிருந்தனர். இந்தியா ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியபோது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற கருத்தை உலக நாடுகளின் மத்தியில் முன் வைத்தது. பெண்களின் வளர்ச்சி மூலம் அடுத்தக்கட்டத்தை அடைவது என்பது உலகளவில் மிக முக்கியமானது. அதனால், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்து பேசி, அதில் பலனும் அடைந்துள்ளோம்.
நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையும், பங்கும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமைச்சரவையிலும் அவர்களது பங்கு விரிவடைகிறது. நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டும்.
இந்தியர்களின் கனவு
'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு. அதை நாம் கொண்டாடுவதன் மூலம் அம்பேத்கருக்கு உண்மையான அஞ்சலி செலுத்த முடியும்.
இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2047-ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தான் அனைத்து இந்தியர்களின் கனவாகும்.
இந்தியாவின் ஒற்றுமைக்கு பிரிவு 370 ஒரு தடைக்கல்லாக இருந்தது. அதை தற்போது நாங்கள் நீக்கிவிட்டோம். இந்தியா மாதிரியான பெரிய நாடு வளரவும், உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யவும் அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்.
ஜி.எஸ்.டி நமது பொருளாதார ஒற்றுமையில் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எங்களது முடிவுகளும், கொள்கைகளும் இந்தியாவின் ஒற்றுமையை பலப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டது.
25...50-வது ஆண்டில்
அரசியலமைப்பு சட்டம் 25-வது ஆண்டை நிறைவு செய்தபோது, அது நாடாளுமன்றத்தில் கிழிக்கப்பட்டது. அப்போது, நாடு ஒரு சிறையாக மாற்றப்பட்டிருந்தது. குடிமக்களின் உரிமைகளும், பத்திரிகை சுதந்திரமும் பறிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் மீதான இந்த கறையை எப்போதும் அழிக்க முடியாது.
50-வது அரசியலமைப்பு நிறைவு ஆண்டில், வாஜ்பாய் அரசு அதை பெரிதும் கொண்டாடினார்கள். 60-வது ஆண்டில் நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தேன். அப்போது அரசியலமைப்பு சட்டத்தை யானை மீது ஊர்வலமாக கொண்டு வந்தேன். இன்று அரசியலமைப்பு சட்டம் குறித்த நல்ல விவாதத்தை எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் வேதனையை கொட்டினர்.
மின்சாரம் சப்ளை...
முந்தைய அரசில், பலமுறை நாட்டின் ஒரு பகுதியில் மின்சாரம் இருக்கும். ஆனால், அது பகிரப்படாது. அதனால், நாட்டின் இன்னொரு பகுதியில் இருள் இருக்கும். இதனால், உலக அளவில் இந்தியாவின் பெயர் கெட்டுப்போனது. ஆனால், இப்போது இந்தியாவில் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.
அரசியலமைப்பு சட்ட மாற்றம்...
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல முறை முயற்சித்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறவும் செய்திருக்கிறது. கடந்த ஆறு பத்தாண்டுகளில், அரசியலமைப்பு சட்டம் 75 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிரதமர் நேருவால் போடப்பட்ட இந்த விதை இன்னொரு பிரதமர் இந்திரா காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்டது.
நாட்டில் உள்ள பல அரசியல் கட்சியினர் எமர்ஜென்சி காலத்தில் சிறைவாசம் அனுபவித்தார்கள். ஆனால், அவர்கள் இப்போது காலத்தின் கட்டாயத்தால் காங்கிரஸுடம் இணைந்துள்ளனர்.
1947-1957 வரை தேர்தல்கள் நடந்தப்படாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. 1952-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ராஜ்ய சபா மற்றும் மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தது இல்லை. அப்போது அப்போதைய பிரதமர் நேரு 'அரசியலமைப்பு சட்டம் இதற்கு குறுக்காக வந்தால், அதை மாற்ற வேண்டும்' என்று கடிதம் எழுதியிருந்தார்.
பொது உரிமையியல் சட்டத்தை அம்பேத்கர் தீவிரமாக ஆதரித்தார். அதனால் தான், அதை கண்டுவர நினைக்கிறோம்.
நாங்களும் தான்...
நாங்களும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி இருக்கிறோம். ஆனால், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பெண்களின் வளர்ச்சிக்காக" என்று பேசியுள்ளார்.