எல்லா காலத்திலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தலையில் இருக்கிற ஒரு பிரச்னை, பேன் தொல்லை. தலைமுடி அதிகமாக இருந்தால் ஆண்களுக்கும் பேன் தொல்லை வரும். பேன் ஏழு பாய் தாண்டும் என்பதற்கு அர்த்தம் என்ன; பேன் தொல்லை வராமல் தடுப்பது எப்படி, வந்துவிட்டால் சரி செய்வது எப்படி என சொல்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா .
பேன் ஏன் உருவாகிறது?
’’பேன் என்பது தலையில் முட்டையிட்டு வாழும் ஒருவகை உயிரினம். இதன் எண்ணிக்கை அதிகரிக்க தலையில் அரிப்பு , முடி உதிர்வு போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும்.
இவை அதிகம் முடி வளரும் இடங்களில் இருக்கும். பெரும்பாலும் நாம் இதனை தலைமுடிகளில் பார்க்கலாம். தலையில் அழுக்கு சேர ஆரம்பித்தாலே பேன் உருவாக தொடங்கி விடும். பின்பு தலை முடிகளிலே முட்டை வைத்து பெருகி விடும். ஒரு பேன் தன் வாழ்நாளில் 7 முதல் 10 முட்டைகள் வரை இடும். நாம் மற்றவர்களின் சீப்பு, டவல் போன்றவற்றை உபயோகப்படுத்துவதால் பேன் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. ‘பேன் ஏழு பாய் தாண்டும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மைதான். ஒரு வீட்டில் ஒருவர் தலையில் பேன் இருந்தாலே, அது அந்த வீட்டில் இருக்கும் அனைவர் தலைக்கும் பரவி விடும். இப்படிப் பரவுவதை தான் ‘பேன் ஏழு பாய் தாண்டும்’ என்று சொன்னார்கள்.
பேன்களை விரட்ட 2 இயற்கை வழிகள்!
இயற்கையாக இந்தப் பிரச்னையை சரி செய்ய, நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்த துளசி மற்றும் வேப்பிலைப்பொடியினை சமஅளவு எடுத்து, இத்துடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாக கலந்து, தலைமுடியில் தேய்த்துக்கொள்ள வேண்டும். 10 நிமிடம் தலையில் ஊறவைத்து, பின் ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இந்தக் கலவை தலையில் இருக்கும்போது உங்களுக்கு பேன் தொற்று அதிகம் இருந்தால், அரிப்பும் சற்று அதிகமாகவே இருக்கும். இதனால், உங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராது. தலையை வாஷ் செய்த பிறகு, டவலை வைத்து தலையைத் துவட்டினால், தலையில் உள்ள அனைத்து பேன்களும் கீழே கொட்டிவிடும். இரவில் தலைக்கடியில் துளசி இலைகளை வைத்து தூங்கினால்கூட, பேன் தொற்று குறையும். ஆனால், உடனடியான தீர்வுக்கு மேலே சொன்ன கலவையைப் பயன்படுத்துவதே சரி.
பேன் இருக்கும். ஆனால், அரிப்பு இருக்காது... ஏன்?
தலையில் பேன் தொற்று அதிகமாக இருந்தால், அதற்கான மருந்தை மருத்துவரிடம் ஆலோசித்து உபயோகப்படுத்துவது நல்லது. பேன் தொற்று இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது என்றால், ஷாம்பூ தன்மை கொண்ட மருந்தினை உபயோகப்படுத்தலாம். லோஷன் வகை பேன் மருந்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தலைமுடியினை பகுதி பகுதியாகப் பிரித்து, மருந்தினை பஞ்சில் தொட்டு அனைத்து இடங்களிலும் படும்படி உபயோகப்படுத்தவும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை சுத்தம் செய்தால், பேன் தொல்லை இனி இல்லை. பேன் தொற்றை தொடக்கத்திலேயே சரி செய்யவில்லை என்றால், அவை உடலில் முடி உள்ள அனைத்து இடங்களிலும் பரவ தொடங்கிவிடும். ஒன்று அல்லது இரண்டு பேன் இருந்தால் அதிக அரிப்பை உண்டாக்கும். ஆனால், பேன் அதிகமானால் அரிப்பு இருக்காது. தலையில் பேன் அதிகமானால், உடலில் வெப்பம் அதிகரித்தல், கவனச்சிதைவு, அதிக முடி உதிர்வு, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகளும் இருக்கும் .
பேன் சீப்பை பயன்படுத்துகையில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...
வறண்ட தலைமுடியில் பேன் சீப்பை கொண்டு வாறக்கூடாது. இதனால், முடி உதிர்வு அதிகமாகும். தலையில் எண்ணெய் வைத்த பிறகே பேன் சீப்பினை உபயோகப்படுத்த வேண்டும். தினம் இருமுறையாவது பேன் சீப்பினை பயன்படுத்தினால் பேன் தொற்று குறைந்து விடும். பேன் சீப்பினை உபயோகப்படுத்தியும் பேன் குறையவில்லை என்றால், கைகளை பயன்படுத்தியே அவற்றை நீக்கலாம்.
ஈறு தொல்லையும் இருக்கிறதா?
பேன் இருந்தால் ஈறுத்தொல்லையும் இருக்கும். தலையில் மிகுதியாக எண்ணெய் வைத்துவிட்டு, பிறகு ஈறுகளை நீக்கும் மரத்தாலான ஈர் கோலியை பயன்படுத்தினால், ஈறு தொற்று குறையும். ஹேர் அயனை (hair iron) பயன்படுத்தினாலும் ஈறு தொல்லை உடனடியாக குறையும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook