வேகமா சாப்பிட்டா ஆயுள் குறையும்னு பெரியவங்க சொல்வாங்க. ஏன் வேகமா சாப்பிடக்கூடாது; ஏன் நிதானமா சாப்பிடணும்னு செரிமானத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட டாக்டர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம்.
’’சீக்கிரமா சாதிக்கணும், சீக்கிரமா ஃபிளாட் வாங்கணும், சீக்கிரமா லைஃப்ல செட்டில் ஆகணும்னு நினைக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, சாப்பிடுறதுக்கும் நேரம் இல்லைன்றதும் வேக வேகமா சாப்பிடுறதும் ரொம்பவும் தவறான விஷயம். அதுவும் டிராவல்ல சாப்பிடுறது, நின்னுக்கிட்டே சாப்பிடறது, சாப்பிட்ட உடனே ஓடுறது எல்லாமே செரிமானத்தை தடுக்கிற ஆபத்தான பழக்கங்கள்தான்.
கெட்டுப்போனதை கண்டுபிடிச்சிடலாம்!
நிதானமா சாப்பிடுறப்போ தான் இந்த உணவு கசப்பா இருக்கு, கெட்டுப்போன மாதிரி இருக்குன்னு உணர்ந்து அதை துப்புறதுக்கு நமக்கு நேரம் இருக்கும். அவசரப்பட்டு அரைகுறையா மென்னு அத முழுங்கிட்டோம்னா, அதுல ஏதாவது ஃபுட் பாய்சன் இருந்தா வயித்துக்குள்ள போய்டும். பிறகு, வாந்தி, வயிற்றுப்போக்குன்னு அவஸ்தைப்பட வேண்டி வரும். மூக்குல இருக்கிற வாசனை உணர்வும், நாக்குல இருக்கிற சுவை உணர்வும், ’ஓர் உணவுப்பொருள் நமக்கு உகந்ததா, இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்காகத்தான் இயற்கை ரெண்டையும் நெருக்கமா உருவாக்கியிருக்கு. வேக வேகமா சாப்பிட்டா அவற்றையும் பயன்படுத்த முடியாதுங்கிறதுதான் உண்மை.
பொறை ஏறாம தடுக்கலாம்!
அவசரமா சாப்பிடுறப்போ பொறை ஏறலாம். சாப்பாடு, தண்ணி போற வழியும், நம்ம உயிர் வாழ ஆதாரமாக இருக்கிற மூச்சுக்காற்று போற வழியும் பக்கத்து பக்கத்துல தான் இருக்கு. ஒரு சிக்கலான இடம் அது. மூக்கிலிருந்து போற காத்து தொண்டைக்குள்ள முன்பக்கமா வரணும். அதுக்கு கீழ இருக்கிற வாய்க்குள்ள இருந்து போற சாப்பாடும், திரவ உணவுகளும் தொண்டைக்கு பின்பக்கமா போகணும். வாய் வழியா உணவும் தண்ணியும் உள்ள போறப்போ மூச்சுக்குழாய் மூடிக்கும். ஒரு துளி நீரோ அல்லது ஒரு சோற்றுப்பருக்கையோ மூச்சுக்குழாய்க்குள்ள போச்சுன்னா பொறை ஏறி அவஸ்தைப்படுறவங்களைப் பார்த்திருப்போம். அப்படி நடக்காம இருக்கணும்னா, அவசர அவசரமா சாப்பிடக்கூடாது.
வேற எதையோ நினைச்சுக்கிட்டு, டிவி பார்த்துட்டு, போன் பார்த்துட்டு அல்லது போன் பேசிட்டே அவசர அவசரமா சாப்பிடுறதும் ரொம்ப ரொம்ப தப்பு. இதனாலும் பொறை ஏறலாம்.
இரைப்பை நன்றி சொல்லும்!
இரைப்பைங்கிறது தசையாலான ஒரு பை. உணவுப்பொருளை பற்களால நல்லா அரைச்சுதான் அதுக்குக் கொடுக்கணும். மசால் வடை, சிக்கன் பீஸ்னு அரைகுறையா மென்று இரைப்பைக்கு அனுப்பினா, அது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? நம்ம வேலைய நாம செய்யாம அடுத்த டேபிளுக்கு எல்லாத்தையும் அனுப்புறது எவ்ளோ பெரிய தப்போ, அதே அளவு தப்புதான், அவசரமா அரைகுறையா மென்று வயித்துக்குள்ள உணவை அனுப்புறதும். மனித உடம்புல ரொம்ப வலுவான தசை, தாடையின் தசைதான். மனித உடம்புல தேயாத ஒரு பாகம் பற்கள்தான். இந்த ரெண்டையும் பயன்படுத்தி உணவை நல்லா மெல்றதுக்குத்தான் இயற்கை கொடுத்திருக்கு. அதை நீங்க சரியா செய்யுறப்போ, உங்க இரைப்பை எவ்ளோ நன்றி சொல்லும் தெரியுமா? தவிர, அரைக்கிற வேலை குறையுறப்போ இரைப்பையில இருக்கிற சில பாக்டீரியாக்கள், உணவுல இருக்கிற கெட்ட விஷயங்களை சுத்தம் செஞ்சிடும். இவற்றையெல்லாம் உங்க உடம்பு செய்யணும்னா, நீங்க நிதானமா நல்லா மென்னு சாப்பிடணும். அப்போ ஆரோக்கியமா இருப்பீங்க. ஆரோக்கியமா இருந்தா, ஆயுசும் அதிகரிக்கத்தானே செய்யும்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...