நம் வீட்டின் உணவு கஜானா என ஃப்ரிட்ஜை சொல்லலாம். தினசரி தேவைக்கான காய்கறி, பழங்களில் ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு முன் வைத்த துவையல் முதல் நேற்று வைத்த வத்த குழம்பு வரை அனைத்தையும் அதற்குள் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஃப்ரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எவற்றை வைக்கக்கூடாது என்பதை விளக்குகிறார் செனையைச் சேர்ந்த உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரியின் உணவுப் பதப்படுத்துதல் துறை உதவி பேராசிரியர் முனைவர் எஸ்.கே. மாதங்கி.
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற அனைத்து வகையான கிழங்கு வகைகள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற பொருள்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பொருள்களை காற்றோட்டமான உலர்ந்த இடங்களில் வைத்தாலே போதும். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் தன்மையை இழந்துவிடும் அல்லது முளைவிட ஆரம்பிக்கும்.
பனீர் போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுப்பொருள்கள் எளிதில் நுண்ணுயிர்கள் தாக்கத்திற்கு உள்ளாகும். பனீரை vacuum packaging செய்யப்பட்டதில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் அதை முழுவதும் பயன்படுத்தி விடுங்கள். இல்லையென்றால், காற்றுபுகாத பாக்ஸில் தண்ணீர் ஊற்றி பனீரை தண்ணீருக்குள் மூழ்க வைத்து வைத்தால், ஃப்ரெஷ் ஆக இருக்கும். இருப்பினும் விரைவில் அதை பயன்படுத்தி விட வேண்டும். தற்போது உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை வைப்பதற்கு தனி பகுதி வருகிறது. அதை பயன்படுத்துவது சிறந்தது.
நாம் சிறிய பாக்கெட்களில் வாங்கும் மசாலா பொருள்கள், நறுமண பொருள்களில் வண்டு வந்து விடுமோ என நினைத்து அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம். குளிர்சாதனப் பெட்டியில் இவற்றை வைக்கும்போது நறுமண பொருள்களில் உள்ள வாசனை ஃப்ரிட்ஜில் உள்ள மற்ற பொருள்களுக்குப் பரவும். அவற்றின் நுண் ஊட்டச்சத்துக்களும் குறையும். அதனால், நறுமண மற்றும் மசாலா பொருள்களை காற்றுப்புகாத பாக்ஸில் வைப்பதே நல்லது.
இறைச்சி வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, அதை ரத்தம் இல்லாமல் சுத்தம் செய்து விட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கன்டெய்னரில் மூடி, ஃப்ரீசர் பகுதியில் வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்தக் கறிகளில் இருந்து வெளிவரும் சாறுகள் மற்ற உணவு பொருள்களில் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும், ரத்தத்தை சுத்தம் செய்யாமல் அப்படியே உள்ளே வைத்தால் நுண்ணுயிர் தாக்கத்திற்கு எளிதில் வழிவகுக்கும். தவிர, ஃப்ரீசர் பகுதி ஃப்ரிட்ஜின் கீழ்ப்பகுதியில் இருந்தால் அடிப்பகுதியில் இருந்தால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கன்டெய்னரில் வைப்பது சிறந்தது. ஃப்ரீசர் மேல்பகுதியில் இருக்கிறது என்றால், காற்றுப்புகாத பாக்ஸில் வைக்க வேண்டும்.
தோசை மாவு பாக்கெட்களில் வாங்கும்போது, ஒரு வாரம் வரைக்கும் பயன்படுத்தலாம் என்று போடப்பட்டிருக்கும். ஆனால், பாக்கெட்டை பிரித்து விட்ட பிறகு 2 நாள்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். நீண்ட நாள் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைப்பது கடினம். நல்ல சுத்தமான கன்டெய்னரில் கை படாமல் அரைத்து store செய்வது நல்லது.
கீரை வகைகளை உள்ளே வைப்பதற்கு முன்பு, அதை கழுவி ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி விட்டு வையுங்கள். இல்லையென்றால் அது எளிதில் அழுகி விடும். கொத்தமல்லி, புதினா ஆகியவற்றில் வேர், தண்டுப் பகுதிகளை நறுக்கிவிட்டு அப்படியே உள்ளே வைக்காமல் பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் கண்டெய்னரில் வையுங்கள்.
உலர்ந்த அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு போன்ற மாவுப்பொருள்களை பாக்கெட்களில் இருந்து பிரித்து பயன்படுத்தி விட்டு அதை பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது. அது வைக்க தேவையில்லை. வைத்தே ஆக வேண்டுமென்றால், தனியான பகுதியில் வைக்க வேண்டும்.
பிரெட் வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது சற்று கடினமாக மாறிவிடும் என்பதால், தவிர்த்து விடுங்கள்.
தண்ணீர்ச்சத்து நிறைந்த பழங்களை வெட்டிவிட்டால், அப்போதே சாப்பிட்டுவிட வேண்டும். வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால், நுண்ணுயிர்களால் எளிதில் பாதிக்கப்படும்.
முட்டை ஒரு வாரத்துக்கு மேல் கெடாது என்பதால், ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த தேவையில்லை.
சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பழக்கம் தற்போது மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. சமைத்த உணவு மீதம் இருந்தாலோ, அதிகம் சமைத்தாலோ, இருவரும் வேலைக்கு சென்றாலோ குளிர்சாதனப் பெட்டிகளில் சமைத்த உணவை அப்படியே வைத்து சில நாள்கள் வரை பயன்படுத்துகிறோம். ஆனால், மக்களுக்கு தெரிவதில்லை, அந்த உணவுகளை குறைந்த வெப்பநிலையில் இருக்கும்போது சீக்கிரம் கெட்டுப் போய்விடும் என்பது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்கும். அது கெட்டு போய்விட்டதா என்றுகூட நமக்குத் தெரியாது.
உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு பொரியல்களை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அக்கிழங்கின் தன்மை மாறுவதோடு, நுண்ணுயிரிகளின் தாக்கமும் அந்த உணவுகளில் மிக அதிகம் இருக்கும். நுண்ணுயிர்களின் வித்துக்கள் சூடுபடுத்தினாலும் எளிதில் அழியாது. ஃபிரிட்ஜில் நுண்ணுயிரிகள் எந்த அளவில் உள்ளது என்பதும் நமக்குத் தெரியாது. தவிர, ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுப்பொருள்களை சரியான வெப்பநிலையில் சூடுபடுத்தி உண்ண வேண்டிய அவசியமும் உள்ளது.
பிரியாணி போன்ற உணவுப்பொருள்களை சமைத்த 2-3 மணி நேரத்தில் சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும் என எண்ணி உங்கள் ஆரோக்கியத்தை பாழ்படுத்திக்கொள்ள வேண்டாம்.
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உணவை, உடனடியாக அறை வெப்ப நிலைக்கு கொண்டு செல்ல கூடாது. அவற்றை வெந்நீரில் வைத்துவிட்டு, அப்புறமாகத்தான் சூடுபடுத்த வேண்டும்.
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உணவை சூடுபடுத்தும்போது, பாத்திரத்தின் நடுப்பகுதி சூடாகும் வரை உணவை சூடுபடுத்த வேண்டும். சரியாக சூடுபடுத்தி உண்ணவில்லையென்றால் பல வித உடல் பிரச்னைகள் ஏற்படும். உறைய வைக்கப்பட்ட நக்கட்ஸ், ஸ்மைலி போன்றவற்றை எண்ணெய் நன்கு சூடான பிறகே பொரிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு போன்ற உடல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
இந்தியாவில் அனைத்து பொருள்களும் ஃப்ரெஷ் ஆக எளிதில் கிடைக்கின்றன. அவற்றை அவ்வப்போது ஃப்ரெஷ் ஆக சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்’’ என்கிறார் மாதங்கி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook