Azerbaijan Flight Crash: கடந்த 25-ம் தேதி அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் விமானம் கஜகஸ்தானில் விழுந்து 38 பேர் மரணித்தனர். இந்த விபத்துக்கான காரணம் துல்லியமாக தெரியாத நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால்தான் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
62 பயணிகள் மற்றும் 5 குழு உறுப்பினர்களுடன் புறப்பட்ட விமானம் புதன்கிழமை கஜகஸ்தானில் உள்ள அக்டௌ நகரில் வீழ்ந்தது. இதுவரை 32 பேர் விமானத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
போர் நடந்த இடத்திலிருந்து திசை மாற்றம்!
அஜர்பைஜான் விமானம் J2-8243 ரஷ்யாவின் செச்னியா பகுதிக்கு அருகாமையில் சென்று அங்கிருந்து திசை திரும்பி கஜகஸ்தானின் அக்டௌ நகருக்கு அருகில் விழுந்துள்ளது. செச்னியா பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் போர் விமானங்களை சமாளிப்பதற்காக வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான எம்ப்ரேயர் பயணிகள் விமானம் அஜர்பைஜானின் பாகு (Baku) நகரிலிருந்து வடக்கு ரஷ்யாவின் செச்னியா பகுதியில் உள்ள க்ரோஸ்னி நகருக்கு செல்லவிருந்தது. ஆனால் அதன் திட்டமிட்ட பாதையிலிருந்து பல நூறு மைல்கள் தாண்டி வீழ்ந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வரை செச்னியாவில் உக்ரைன் ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. சரியாக அந்த பகுதியில் இருந்து பாதை விலகிய விமானம் அதற்கு எதிர் திசையில் காஸ்பியன் கடலின் மறுகரையில் வீழ்ந்துள்ளது.
பறவை மோதியதா?
முன்னதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு, பறவை தாக்கியதாலேயே இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறியது. ஆனால் விமானம் காஸ்பியன் கடலைக் கடந்து மறுகரையில் விழுந்தது ஏன் என ரஷ்ய அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.
ரஷ்யாவின் பான்சிர்-எஸ் என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாலேயே விமானம் சுடப்பட்டதாகக் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ரோஸ்னி நகரை அணுக விமானத்திலிருந்தவர்கள் முயலுகையில் போர் முறை மின்னணு முடக்குதல் அமைப்புகளால் தொடர்புகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
முழுமையான விசாரணை...
அஜர்பைஜான் தரப்பிலிருந்து ரஷ்யா வேண்டுமென்றே இந்த விபத்தை நிகழ்த்தியது எனக் கூறவில்லை என்றாலும், ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளே விபத்துக்கு காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று நினைப்பதாக ராய்ட்டர்ஸ் தகவல்கள் கூறுகிறது.
விமான விபத்து குறித்த காட்சிகளைப் பார்க்கையில் விமானத்தின் வால்பகுதியில் இருக்கும் இடிபாடுகள் anti-aircraft ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என விமானப் பாதுகாப்பு நிறுவனமான Osprey Flight Solutions தெரிவிக்கிறது.
மேலும் விமானத்தின் பாதையெங்கிலும் ஜி.பி.எஸ் தொடர்பில் சிக்கல் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென நேட்டோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விமானத்தின் கருப்பு பெட்டியில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் மேற்படி விசாரணை நடைபெறும் என கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.