வீடே மணக்கும் அளவுக்கு குடும்பத்தினர் அனைவரும் தோசை சுட்டு சாப்பிடும்போது, உங்களுக்கு மட்டும் கோதுமை உப்புமான்னா கொஞ்சம் சலிப்பாதான் இருக்கும். ஆனால் என்ன செய்வது சர்க்கரைநோய் வந்துவிட்டால் வாயைக்கட்டித்தானே ஆகணும். "அட அப்படியெல்லாம் இல்லீங்க. சர்க்கரை நோயாளிகளும் ருசியான உணவைச் சாப்பிட்டு சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்" என 'ஸ்வீட்' செய்தி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.
"உடலில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாததை நோய் எனச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தினசரி உடற்பயிற்சி, சமச்சீர் உணவு என வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தாலே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதைக் கடைப்பிடித்தாலே போதும்" எனும் கிருஷ்ணமூர்த்தி, சர்க்கரை நோயாளிகள் என்ன மாதிரியான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என விளக்குகிறார்...
காலை உணவு :
இட்லி - 3 (சிறியது)
மொறுமொறுப்பாக இல்லாமல் ஊத்தப்பம் போன்ற தோசை - 2 (சிறியது)
கோதுமை உப்புமா - ஒரு கப் ( 100 கிராம்)
சப்பாத்தி - 3 (சிறியது)
இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். இதனுடன் பருப்பு அல்லது சாம்பார் அதிக அளவில் எடுத்துக்கொண்டு சட்னியை குறைவாகச் சாப்பிடவும்.
கூடுதலாக ஒரு கப் காய்கறி சாலட் அல்லது 2 முட்டைகளின் வெள்ளைக் கரு சாப்பிடலாம். (கொலஸ்ட்ரால் பிரச்னை இல்லாதவர்கள் மஞ்சள் கருவையும் சாப்பிடலாம்)
சர்க்கரை நோய்க்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைத்தும், புரதச்சத்து மிகுந்த உணவை அதிகமாகவும், நார்ச்சத்து மிகுந்த உணவை மிக அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் காலை உணவுடன் பருப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
மதிய உணவு :
குக்கரில் வேகவைக்காத வடித்த சாதம் - ஒரு கப்
பருப்பு அல்லது சாம்பார் - இரண்டு கப்
பொரியல் - ஒரு கப்
கீரை - ஒரு கப்
காய்கறி சாலட் - ஒரு கப்
அசைவம் சாப்பிடுபவர்கள் சாம்பாருக்கு பதிலாக மீன் குழம்பு, பொரியல் அல்லது கீரைக்கு பதிலாக மட்டன் 100 கிராம், இரண்டு துண்டு குழம்பு மீன்கள் எடுத்துக்கொள்ளலாம். கொழுப்பில்லாத மட்டன், தோல் மற்றும் எலும்பில்லாத சிக்கனை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மாலை சிற்றுண்டி :
வேகவைத்த சுண்டல் கடலை அல்லது சிறுதானிய பயறு வகைகளில் ஏதாவது ஒன்று - ஒரு கப்
பப்பாளி - 4 அல்லது 5 துண்டுகள்
பேரிக்காய் - 2 (சிறியது)
ஆப்பிள் - 1 (சிறியது)
இவற்றில் ஏதாவது ஒன்றும் இதற்கடுத்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு காபி அல்லது தேநீர் அருந்தலாம்.
இரவு உணவு :
சப்பாத்தி - 3
பருப்பு - ஒரு கப்
வேகவைத்த காய்கறி - ஒரு கப்
இன்னும் சில தகவல்கள் ...
காய்கறிகளில் புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய் என தண்ணீர்ச்சத்து நிறைந்தவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
பழங்களில் கொய்யா, பப்பாளி, நெல்லிக்காய், பேரிக்காய், அத்தி, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, நாவல் போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு போன்ற பயறு வகைகளை சுண்டலாக வேகவைத்து சாப்பிடலாம்.
சிறுதானிய வகைகளான குதிரைவாலி, சாமை, வரகு, திணை, மக்காச்சோளம் போன்றவற்றை சாதம், உப்புமா, தோசையாகச் சாப்பிடலாம். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் இந்த ரகங்களின் உமியை நீக்கிவிட்டு உபயோகிக்கலாம்.
எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தவிட்டு எண்ணெய் (ரைஸ் பிரான் ஆயில்), சோள எண்ணெய் (கார்ன் ஆயில்), சோயா எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
மீன் வகைகளில் மத்தி, சங்கரா, கானாங்கெழுத்தி, அயிரை போன்ற மீன்வகைகளை குழம்பாகச் சமைத்துச் சாப்பிடலாம். இவற்றில் ஒமேகா 3 உள்ளதால், இதய நோயாளிகளுக்கு ஏற்றவை. சைவம் சாப்பிடுபவர்கள் ஒமேகா 3-யின் தேவைக்கு வால்நட் மற்றும் ஆளி விதையைச் சாப்பிடலாம்.
புரதச்சத்து அதிகம் தேவைப்படுவதால் பருப்பு, சாம்பார் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம். அசைவப் பிரியர்கள் புரதத்துக்கு முட்டையும், தோல் மற்றும் எலும்பு நீக்கிய சிக்கனையும் உண்ணலாம். தினமும் பருப்பு, சாம்பார் என சலிப்படைந்தால் காரக்குழம்பு செய்து சாப்பிடலாம் ஆனால் குழம்பில் கிழங்கு மற்றும் காய்கறிக்கு பதிலாக காராமணி, சுண்டல் கடலை போன்றவற்றைச் சேர்க்கலாம்.
நம் வழக்கத்தில் உள்ள உணவுகளைச் சமைக்கும் விதத்திலும் சாப்பிடும் விதத்திலும் சில மாற்றங்களைச் செய்தாலே, ருசியான உணவை உண்ட திருப்தியுடன் ஆரோக்கியத்தையும் காத்து மகிழ்வுடன் வாழலாம்.’’
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook