BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 3 December 2024

ஒரே வெள்ளத்தில் நொறுங்கிய புதிய பாலம்; திராவிட மாடல் மீது எடப்பாடி விமர்சனம் - கள நிலவரம் என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை, 2023-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது.

நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பாலத்தை கட்டி முடிக்கவும் திட்டமிட்டு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தான் பூஜைப் போட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், செப்டம்பர் 2-ம் தேதி உயர்மட்ட பாலத்தை பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தவரும் அமைச்சர் எ.வ.வேலு தான்.

அந்த நிகழ்ச்சியில் எ.வ.வேலு பேசியதையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ``1984-ம் ஆண்டு அகரம் பள்ளிப்பட்டில் இருந்து தொண்டமானூருக்கு வாக்குச் சேகரிக்க தென்பெண்ணை ஆற்றில் பாய்ந்த இடுப்பளவுத் தண்ணீரில் இறங்கி கடந்திருக்கிறேன். நான் அந்த ஒரு நாளைக்கே இந்த கஷ்டத்தை அனுபவித்தேன் என்றால், இந்தப் பகுதி மக்கள் 40 ஆண்டுகாலமாக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்.

வெள்ளத்துக்கு முன்பு புதிய உயர்மட்ட பாலத்தின் தோற்றம்

தேர்தல் வந்தால் இந்தப் பாலத்தைக் கட்டியது யார்? என நினைத்து பார்க்க வேண்டும். `திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின்தான் கட்டிக்கொடுத்தார்’ என அவருக்கு விசுவாசமாக கிராம மக்கள் இருக்க வேண்டும்’’ என்று பேசியிருந்தார் எ.வ.வேலு.

இந்த நிலையில், பயன்பாட்டுக்கு வந்து சரியாக 90 நாள்களே ஆன அந்த புதிய உயர்மட்ட பாலம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க வைத்திருக்கின்றன.

``கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷனை படிப்பினையாகக் கொண்டு தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டதால்தான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது’’ என அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

மேலும் அவர் ``காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலம் வெறும் 90 நாள்களில், அதுவும் ஒரே வெள்ளத்தில் மொத்தமாக உடைந்திருக்கிறது. இந்த தி.மு.க ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்றவை என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. பொதுமக்கள் பயணப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத மு.க.ஸ்டாலினின் தி.மு.க அரசுக்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மறுபடியும் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படி செயல்படாமல், மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களைக் கட்டிக்கொடுக்க விடியா தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ``வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் உயர்மட்ட பாலம் சேதமடைந்திருக்கிறது.

நீளம் - 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் - 12 மீ மற்றும் ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டுதான் ஆற்றுப் படுகையில் இருந்து நீர்வழியின் உயரம் - 5 மீ, பாலத்தின் உயரம் - 7 மீ என வடிவமைக்கப்பட்டது. நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர் வெளியேற்றம் [ Design Discharge ] 54,417 கன அடி ஆகும். திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.

தற்போது, புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கனமழையினால், சாத்தனூர் அணையில் இருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதாவது, அணையின் பாதுகாப்புக் கருதி 2 லட்சம் கனஅடிக்கு மேல் திறக்கப்பட்டது. மேலும், அணையில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் பாலம் உள்ளது. பாம்பாறு மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும் இணைந்ததால், பாலத்தின் மேல் பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியது. இதன் காரணமாகவே பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டிருக்கிறது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து, மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தில் இடிந்த பாலத்தின் தற்போதைய காட்சி

அரசின் விளக்கம் ஒருபுறம் இருந்தாலும், உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தொண்டமானூர், தென்முடியனூர், மூங்கில்துறைப்பட்டு, தண்டராம்பட்டு, ராயண்டபுரம், அல்லப்பனூர், பி.குயிலம், எடத்தனூர், திருவடத்தனூர், புத்தூர் செக்கடி, கிருஷ்ணாபுரம், சதாகுப்பம், வாழவச்சனூர், இளையாங்கண்ணி, பெருந்துறைப்பட்டு ஆகிய 15 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பவர்கள் தொண்டமானூர் செல்ல சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவைச் சுற்றி வரவேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தீவுப்போல் சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டு காணப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies