மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் மாநிலத்தின் உரிமை பறிபோகவில்லை. அப்படி உரிமை பறிபோகிறது என்றால் 1971ம் ஆண்டு கருணாநிதி சட்டமன்றத்தை கலைத்துவிட்டு ஏன் நாடாளுமன்றத்துடன் தேர்தல் நடத்தினார்.
இதனால் மாநில அரசின் உரிமை பறிபோகிறது என்பது அவருக்கு தெரியாதா. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் தமிழ்நாட்டில் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்களின் வேலை தான் இது.
கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க தவறியதால் தான் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஒரு தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலம் தமிழக அரசு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. அந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள் கலந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
அவர்களை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் அது தவறுதான். குழந்தைகளைக் கூட கொன்று குவித்த ஒருவர் தியாகி போல சித்தரிக்க முடியுமா. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொண்டாட முடியுமா. இது மிகவும் தவறு.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், முறையாக பணியாற்றும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அதேநேரத்தில் கொலையாளிகளை ஊர்வலமாக கொண்டு சென்று மரியாதையுடன் புதைக்க நினைக்கும்போது எதிர்ப்பதும் சாதாரண குடிமகனின் கடமை.” என்றார்.