BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 20 December 2024

`சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்' - தஞ்சாவூர் மாநகராட்சி சர்ச்சை!

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பில் கான்ஃபரன்ஸ் ஹால் கட்டப்பட்டது. ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த கட்டடம், ‘திருமண விழா மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படும்’ என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வருடம் மு.கருணாநிதி அரங்கத்தை சினிமா தியேட்டர் நடத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டது.

தியேட்டர் திறக்கப்போவதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நிர்வாகத்தினர்.

இதையடுத்து மு.கருணாநிதி அரங்கத்தை தியேட்டராக மாற்றிய நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தியேட்டரை திறக்காமல் அப்போது கிடப்பில் போட்டனர். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த வெற்றி சினிமாஸ் உரிமையாளரான வெற்றிவேல் என்பவருக்கு தியேட்டர் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விரைவில் தியேட்டர் திறக்கப்பட இருப்பதாக வெற்றி இ ஸ்கொயர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான விளம்பரங்கள் சமூக வலைதளங்கள் மூலம் செய்யப்பட்டு வரும் நிலையில், கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்ட அரசு கட்டடம் தி.மு.க ஆட்சியிலேயே தியேட்டர் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரன், “பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கருணாநிதி அரங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த அரங்கத்தில் நடைபெற்ற ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பின்னர் தனி நபர்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கேட்டும் உள் நோக்கத்துடன் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை.

சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்

இதைத் தொடர்ந்து, கருணாநிதி அரங்கத்தில் தியேட்டர் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். அதற்கான பணிகள் முடிந்து தியேட்டர் திறக்கப்பட இருந்த நிலையில், கிளம்பிய பலத்த எதிர்ப்பால் கிடப்பில் போட்டனர். அந்த சமயத்தில் தியேட்டர் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என மாநகராட்சியில் தெரிவித்தனர். ஆனால் தற்போது, வெற்றி மற்றும் இ-ஸ்கொயர் நிறுவனம் விரைவில் தியேட்டரை திறக்க இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அந்த வளாகத்தில் மூன்று திரையரங்கம் அமைத்துள்ளனர். எபிக் திரை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தியேட்டரை வடிவமைத்திருப்பதாக அதன் நிர்வாகத்தில் அறிவித்துள்ளனர். சில மாதங்களாக சத்தமில்லாமல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இதற்கான பணிகளை செய்துள்ளனர்.

இது தெரிந்தும் மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை. ரூ. 62 கோடியில் கட்டப்பட்டது தனியாருக்கு தியேட்டர் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இதற்காக ஏற்கனவே கட்டிய கட்டடத்தை இடித்து விட்டு புதுப்பித்துள்ளனர். இதில் பல கோடி பணம் விரயமாகியிருக்கிறது. கருணாநிதி பெயரில் உள்ளதை அவர்களது ஆட்சியில் தனியாருக்கு அதுவும் தியேட்டர் நடத்துவதற்கு தாரை வார்த்துள்ளனர். அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் தியேட்டர் நடத்தப்போகிற நிறுவனம், திறக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ராஜேஷ்வரன்

மக்கள் வரிப்பணத்தில், பொதுமக்களுக்காக கட்டிய கட்டடத்தை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தியேட்டர் திறப்பதை தடுக்க வேண்டும். இல்லை என்றால் அதை கண்டித்து வரும் 27-ம் தேதி அ.ம.மு.க சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் பேசினோம், ``தியேட்டர் நடத்துவதற்கு ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி ஒப்பந்தம் எடுத்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தியேட்டர் நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் மாநகராட்சி மற்றும் மாவட்டம் நிர்வாகம் தியேட்டர் நடத்துவதற்கு எந்த அனுமதியும் தரவில்லை" என்றார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies