மகாராஷ்டிராவில் கடந்த 5ம் தேதி முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். துணைமுதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் பதவியேற்றுள்ளனர். ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்துதான் அரசு பதவியேற்றது. தற்போது பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே இலாகா பங்கீடு தொடர்பாக சிக்கல் நீடித்து வருகிறது.
புதிய அரசு பதவியேற்கும் முன்பு தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசினர். இதில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை அமைச்சர் பதவி என்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இலாகா தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அமைச்சரவை பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.க்கள் மட்டும் பதவியேற்றுள்ளனர். அதோடு சபாநாயகரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் 16-ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. அதற்குள் அமைச்சர்கள் பதவியேற்றாகவேண்டும். ஆனால் இலாகா குறித்து பேச ஏக்நாத் ஷிண்டே இன்னும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. நேற்று இரவு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணைமுதல்வர் அஜித்பவாரும் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கும் ஏக்நாத் ஷிண்டே வரவில்லை. அவர் வராவிட்டாலும் பரவாயில்லை என்று கருதி மற்ற இருவரும் சென்று சந்தித்து பேசினர். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆரம்பத்தில் இருந்தே உள்துறை இலாகாவை கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்போது புதிதாக நிதித்துறையும் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் உள்துறையை கொடுக்க பா.ஜ.க தயாராக இல்லை. மற்றொரு புறம் நிதித்துறை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவாரிடம் இருக்கிறது. அவரிடமிருந்து அதனை பிடுங்குவது சாத்தியம் இல்லை. சிவசேனாவிற்கு நகர்ப்புற மேம்பாடு, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஆகியற்றை கொடுக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
ஆனால் துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்துறை வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து சொந்த ஊரான தானேயில் இருக்கிறார். மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே நேற்று தானே சென்று ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினார். அதோடு அங்கிருந்து ஏக்நாத் ஷிண்டேயை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் பேசச்செய்தார்.
ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி அமைச்சர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் வீதம் இலாகாக்களை சுழற்சி முறையில் மாற்றிக்கொடுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். அதோடு சஞ்சய் ரத்தோட், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்று பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது. அதனை ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் பா.ஜ.க மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இதில் ஏக்நாத் ஷிண்டேயின் கோரிக்கைக்கு அடிபணிவதா அல்லது அஜித்பவாரின் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு ஏக்நாத் ஷிண்டேயை ஓரங்கட்டுவதா என்பது குறித்து பேசியதாக தெரிகிறது.
சிவசேனாவிற்கு பா.ஜ.க 12 அமைச்சர் பதவி கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. அத்தேர்தலுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவை என்று பா.ஜ.க கருதுகிறது. எனவே, இப்போது ஏக்நாத் ஷிண்டேயை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பா.ஜ.க திணறுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு செய்தது போல் முதலில் பா.ஜ.க மற்றும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் மட்டும் பதவியேற்கலாமா என்பது குறித்தும் பா.ஜ.க ஆலோசித்து வருகிறது. 2014-ம் ஆண்டு பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் பட்னாவிஸ் தலைமையில் அரசு பதவியேற்றது. அதோடு அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன் பிறகுதான் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.