விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மனித உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், அருப்புக்கோட்டை அடுத்த பாளையம்பட்டியில் வடக்குத்தெருவில் குப்பைகளுக்கு அருகே குச்சி அடுக்கி வைத்து எரித்த நிலையில் மனித உடல் கருகிக் கிடப்பதாக நகர் போலீஸூக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இதில், அடையாளம் காணமுடியாத அளவுக்கு உடல் பகுதி முழுவதும் எரிந்து கருகிக் கிடந்தது.
இந்நிலையில், கருகிய பாகங்களை மீட்ட போலீஸார், அதனை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து எரிந்த நிலையில் கிடந்தது ஆணா?, பெண்ணா?, யார் அது?, உள்ளூரைச் சார்ந்தவரா? அல்லது வெளியூரைச் சேர்ந்தவரா?, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? அல்லது தவறுதலாகப் போதையில் 'தீ'க்குள் விழுந்து இறந்தாரா? எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து, சுற்றுவட்டாரத்தில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டது. அதன்படி, அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் ஆண் நபர் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், நேற்று முதலே வீட்டுக்கு வராமல் போன கொத்தனார், அதன்பின் எவ்விதத்திலும் வீட்டில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரியவந்தது. மேலும் காணாமல் போனவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், மதுபோதையில் அப்பகுதியில் நடந்து செல்வோரைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வம்பிழுப்பவர் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, காணாமல் போனவரால், பாதிக்கப்பட்ட யாரேனும் முன்விரோதம் காரணமாக இத்தகைய செயலைச் செய்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம், போலீஸார் விசாரணை நடத்தியதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் கருகிய நிலையில் கிடந்த உடல் ஆணா, பெண்ணா என உறுதிப்படத் தெரியாத நிலையில், பிணமாகக் கிடந்தவர் உண்மையில் காணாமல் போன கொத்தனார்தானா அல்லது வேறு யாரேனுமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras