ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி இந்திய அணிக்கு நிறையச் சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 8) தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ரோஹித் சர்மா. அப்போது, "இது எங்களுக்குத் துரதிர்ஷ்டமான வாரம். நாங்கள் சரியாக விளையாடவில்லை. எங்களை விட ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தத் தவறிவிட்தால் போட்டியை இழக்க நேர்ந்தது.
நாங்கள் பெர்த் டெஸ்ட் போட்டியில் செயல்பட்டதுபோலே செயல்பட வேண்டும்" என்று தோல்வி குறித்துப் பேசியிருந்தார்.
அதன் பிறகு சிராஜ், டிராவிஸ் ஹெட் இடையேயான பிரச்னை குறித்து ரோஹித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. அந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்பது மட்டுமே எனது வேலை கிடையாது. ஆனால், இரு அணிகள் விளையாடும்போது இதுபோல் நடப்பது இயல்புதான். இதைப் பெரிதாக்க வேண்டாம். இவை அனைத்தும் விளையாட்டின் ஒரு பகுதிதான்.
சிராஜ் எப்போதும் சண்டை போடுவதை விரும்புவார். விளையாட்டின்போது ஆக்ரோஷம் அடைவதற்கும், மிகவும் ஆக்ரோஷம் அடைவதற்கும் இடையே மெல்லிய கோடுதான் உள்ளது" என்று ரோஹித் கூறியிருக்கிறார்.
நேற்று முடிந்த இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார்.
அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். அப்போது டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாகக் கத்தியதுடன் 'போ' எனப் பொருள்படும் வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...