பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகியிருக்கும் 19 வயது இளம் வீரரான கான்ஸ்டஸூடன் இந்திய அணியின் அனுபவ வீரரான கோலி ஸ்லெட்ஜ்ஜிங்கில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்ஸ்வீனி என்ற ஓப்பனரையே முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தி வந்தது. ஆனால், அவர் 3 போட்டிகளிலும் சேர்த்தே 72 ரன்களை மட்டுமேதான் எடுத்திருந்தார். இதனால் மெல்பர்ன் டெஸ்ட்டுக்கு முன்பாக சாம் கான்ஸ்டஸ் என்கிற 19 வயது இளைஞரை ஆஸ்திரேலிய அணி அணியில் இணைத்துக் கொண்டது. ப்ரைம் மினிஸ்டர் லெவனுக்கு எதிராக இந்திய அணி ஆடிய போட்டியில் கான்ஸ்டஸ் சதமடித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மெல்பர்னில் நடந்து கொண்டிருக்கும் போட்டியில் கான்ஸ்டஸ் ஆஸ்திரேலிய அணியின் லெவனிலும் இடம்பெற்றிருந்தார். அவர் மீது ஆஸ்திரேலிய அணியும் பெரிய நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கான்ஸ்டஸ் மிகச்சிறப்பாக ஆடிக்கொடுத்தார். தற்போதைக்கு உலகின் தலைசிறந்த பௌலர் பும்ராதான்.
நடப்புத் தொடரிலுமே ஆஸி பேட்டர்கள் பும்ராவுக்கு எதிராக கடுமையாக திணறி வந்தனர். ஆனால், கான்ஸ்டஸ் பும்ராவை திறம்பட எதிர்கொண்டார். எந்த தயக்கமும் அச்சமும் இல்லாமல் பந்துகளை எதிர்கொண்டார். நியூபாலில் பும்ராவின் முதல் ஸ்பெல்லிலேயே ரேம்ப் ஷாட்களையெல்லாம் ஆடி அசத்தினார். பும்ரா வீசிய 7 வது ஓவரில் மூன்று ரேம்ப் ஷாட்களை ஆடி 14 ரன்களை சேர்த்தார். சமீபத்தில் பும்ராவை இவ்வளவு தீவிரமாக அடித்து ஆடிய பேட்டர் என யாரையுமே குறிப்பிட முடியாது. ஆனால், அறிமுகப் போட்டியிலேயே கான்ஸ்டஸ் பும்ராவை நிலைகுலைய வைத்துவிட்டார். கான்ஸ்டஸின் அட்டாக்கில் பும்ராவின் லெந்த்களும் தடுமாறின. இந்த சமயத்தில்தான் 10 வது முடிந்திருந்த போது ஓவர் ப்ரேக்கில் விராட் கோலி வேண்டுமென்றே கான்ஸ்டஸின் மீது சென்று மோதி முறைக்கவும் செய்தார்.
கான்ஸ்டஸ் கோலியின் செயலால் அதிர்ச்சியடையவே அவர் ரியாக்ட் செய்வதற்குள் கவாஜா வந்து இருவரையும் விலக்கிவிட்டார். இந்திய அணி பதற்றத்தில் இருந்ததையே கோலியின் ஸ்லெட்ஜ்ஜிங் முயற்சி வெளிக்காட்டியது. இந்த சம்பவத்துக்கு பிறகு பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 18 ரன்களை கான்ஸ்டஸ் வெளுத்தெடுத்தார். இந்த ஓவர் முடிந்த பிறகு ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கைத்தட்டுங்கள் என்பது போல கான்ஸ்டஸ் சைகையும் காட்டினார். கான்ஸ்டஸின் அதிரடி ஆட்டம், கோலியின் ஸ்லெட்ஜ்ஜிங் முயற்சி என மெல்பர்ன் டெஸ்ட்டின் முதல் செஷன் சுவாரஸ்யமாகவே சென்றது.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கான்ஸ்டஸ் 60 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஆட்டம்!