BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 11 December 2024

Ajithkumar: 'ரசிகர் மன்ற கலைப்பு முதல் 'க...அஜித்தே' கோஷம் வரை' - அஜித்தின் அறிக்கைகள்

நடிகர்கள், பிரபலங்கள் பிரபல வெளிச்சத்திலிருந்து விலகி நிற்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

தனிப்பட்ட வாழ்க்கைப் பொதுவெளியில் பேசுபொருளாவது, எல்லாவற்றிருக்கும் கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய நிலை, மிகுந்த பொறுப்புகளுடன் இருக்க வேண்டியக் கட்டாயம், பிரபல பிம்பத்தை பொதுவில் பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் என நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் இந்த பிரபல வெளிச்சம் தின்று தீர்த்துவிடும். இந்த வெளிச்சத்திலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும் காணாமல் போய்விடுவோமோ என்ற அச்சமும் இருக்கும். இதுவே நடிகர்களின் வரமும் சாபமுமாகும். இந்த வரையறைக்குள் பொருந்தாது இந்த பிரபல வெளிச்சத்திலிருந்து விலகி எப்போதும் தனித்து நிற்பவர் அஜித். திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போதே இதைத் துணிவுடன் செய்தவர்.

அஜித்

ஆரம்பத்தில் பட்டங்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள், ரசிகர் மன்ற செயல்பாடுகள், நேர்காணல்களில் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கமளிப்பது என சினிமாவின் கொண்டாட்டங்களையும், சோகங்களையும், ரசிகர்களின் ஆரவாரத்தையும் ஏற்றுக் கொண்டு பிரபல வெளிச்சத்தில் இருந்தவர்தான். ஆனால், ரசிகர்கள் மீதான பொறுப்புணர்வு, தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்தல், இமாலய வெற்றி - தோல்விகள், அரசியல் சர்ச்சைகள் போன்றவை அவரைப் பக்குவப்படுத்தியது என்றே சொல்லலாம்.

பேட்டிகள், நேர்காணல்களில் பங்கேற்றவர் ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார். 'சினிமாவில் நடிப்பது மட்டும்தான் தன் வேலை' என்று தேவையற்ற விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது, பேட்டிகள் கொடுப்பதையெல்லாம் நிறுத்தி, இந்த பிரபல பிம்பத்திலிருந்து விலகுவதற்கான முதல் அடியை எடுத்து வைத்தார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் குறைத்துக் கொண்டார்.

ரசிகர் மன்ற கலைப்பு

ரசிகர் மன்றம் மூலம் சேவைகள் செய்து வந்தவர், 2011ம் ஆண்டு அந்த ரசிகர் மன்றத்தையும் கலைத்தார். அப்போதுதான் அவரது 50வது திரைப்படமான மெகா ஹிட் 'மங்காத்தா' ரிலீஸ். கோலிவுட்டில் உச்சத்தில் இருந்தபோதே துணிவுடன் ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். அப்போது அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், "நான் என்றுமே என் ரசிகர்களை எனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதில்லை. என் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பிற்காக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்" எனக் கூறியிருந்தார்.

இது அஜித் தனது திரை வாழ்வில் எடுத்த மிகபெரிய, மிகத் துணிச்சலான முடிவாகும். உச்சியில் இருக்கும் எந்தவொரு நடிகரும் செய்யத் தயங்கும் விஷயம். அன்று கோலிவுட்டில் அஜித்தின் இந்த முடிவு அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 'வாழு வாழ விடு' என 'ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள். சினிமாவை சினிமாவாகப் பருங்கள்' என்பதை அழுத்தமாகச் சொன்னார். முக்கியமாக ரசிகர்கள் கண்ணியத்துடனும், கெளரவத்துடன் வாழ வேண்டும் என்பதைச் சொல்லியிருந்தார். உண்மையான தன் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பை தனது பிறந்த நாள் பரிசாகத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த சமயங்களில் சில அரசியல் பிரச்னைகளும் அஜித்திற்கு வந்தன. அஜித் இந்தக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார், அந்தக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டன. இதன் மூலம் அஜித் ரசிகர்களின் வாக்குகளைக் குறிவைத்தனர் சிலர். இந்த காரணத்தினாலும் ரசிகர் மன்றத்தை ஒட்டு மொத்தமாகக் கலைத்தார் அஜித்.

'அரசியல் எனக்கு வேண்டாம்'

நிஜத்தில் மட்டுமல்ல திரைப்படங்களில்கூட அரசியல் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் அஜித். ஆனால், அவ்வப்போது அஜித் மேல் அரசியல் சாயம் பூசப்படும். அப்படியாக, 2019 பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதாக வதந்திகள் பரவின. அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அஜித், "அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும்.

இந்தத் தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக் கட்ட அரசியல் தொடர்ப்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்ல, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன்" என்று கூறியிருந்தார்.

'பட்டங்கள் வேண்டாம்'

'லக்கி ஸ்டார்', 'அல்டிமேட் ஸ்டார்', 'தல' என்ற பட்டங்களால் ரசிகர்கள் அஜித்தை அன்புடன் அழைத்தனர். ஆனால், இந்தப் பட்டங்கள் எல்லாம் எதுவும் வேண்டாம், அஜித் குமார், அஜித், ஏ கே என குறிப்பிட்டால் போதும் என்று திடீரென அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இதுகுறித்து, "பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்." என்று கூறியிருந்தார்.

'எந்தவொரு சோஷியல் மீடியாவுலையும் அக்கவுண்ட் இல்லை'

அஜித் எந்தவொரு அறிவிப்பையும் அவரது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா சோஷியல் அக்கவுண்ட் மூலமே வெளியிடுகிறார். இருப்பினும், அஜித்தின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா அக்கவுண்ட் எனப் பல போலியான அக்கவுண்ட்கள் மூலம் சர்ச்சைக்குரிய பதிவுகளையும், வதந்திகளையும் பரப்பினர் சிலர். உடனே இதற்கு சட்டரீதியாக ஆக்‌ஷன் எடுத்த அஜித், தனக்கு எந்தவொரு சோஷியல் மீடியா அக்கவுண்ட்களும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

'உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு, எனக்குத் தொழில்'

பொதுநிகழ்ச்சிகளில், அரசியல் நிகழ்ச்சிகளில் சிலர் 'வலிமை அப்டேட்' என்று கோஷமிட்டதும், அப்போது அஜித் வேண்டுகோள் விடுத்ததும் எல்லோரும் அறிந்ததே. அதில் அஜித் சொன்ன முக்கியமான வார்த்தை, "உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில்" என்பதுதான்.

அவர் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில், "என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் "வலிமை" சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன்.

அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

'க.... அஜித்தே ' என்ற இந்த கோஷம்

Ajith Notice - அஜித்

'சினிமா எனக்குத் தொழில், உங்களுக்குப் பொழுது போக்கு', 'ரசிகர்கள் முதலில் குடும்பத்தையும், தங்கள் கடமைகளையும் பாருங்கள். கண்ணியத்துடன் இருங்கள்' என்பதே அஜித் எப்போதும் சொல்வது. வெற்றி திறமையால் வரலாம், ஆனால், மரியாதை நம் செயல்களிலும், குணத்திலும் வருகிறது. அஜித்தின் ஒவ்வொரு செயல்களிலும் அவர்மீதான மரியாதையும், கண்ணியமும் கூடிக்கொண்டே இருக்கின்றன. நாம் நேசிப்பவர்களுக்கு பிரைவஸியையும், கண்ணியத்தையும் அன்புப் பரிசாக வழங்குவோம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies