மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய் கடிக்கு ஆளாகி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை சத்திய சாய் நகரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் என்.ஜி. மோகன், மதுரையில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள பதிலில், 2020 முதல் 2024-ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான 5 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 523 பேர் (1,33,523) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரேபிஸ் பாதிக்கப்பட்டு 32 பேர் உயிரிழந்தள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆர்.டி.ஐ ஆர்வலர் மோகன் தெரிவிக்கும்போது, "மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சைகளை அதிக அளவில் செய்ய வேண்டும். மாநகராட்சி தரப்பில் நாய்களுக்கு அதிக அளவில் கருத்தடை செய்வதாக கூறினாலும், நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு ஆய்வு நடத்த வேண்டும்" என்றார்.
அதே நேரம், "தெரு நாய்கள் என்று சொல்லப்படும் சமூக நாய்கள் கடித்தால் அலட்சியமாக இல்லாமல் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். சமூக நாய்களை சீண்டாமல், துன்புறுத்தாமல் அவைகளின் நலனில் மக்களும், அரசு நிர்வாகங்களும் அக்கறை கொள்ள வேண்டும்" என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.