உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சீமா என்ற பெண் ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபரைக் கடந்த 2013-ம் ஆண்டு முதல் முறையாக திருமணம் செய்தார். சில மாதங்கள் கழித்து சீமா தனது கணவர் குடும்பத்திற்கு எதிராக போலீஸில் புகார் செய்தார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சீமாவிற்கு 75 லட்சம் கிடைத்தது.
அதையடுத்து 2017-ம் ஆண்டு குருகிராம் பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவரை திருமணம் செய்தார். அத்திருமணம் முடிந்த சில மாதங்களில் கணவரிடமிருந்து சீமா பிரிந்து சென்று போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி கணவரிடம் ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரை சீமா திருமணம் செய்தார். ஆனால் 36 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சீமா தப்பிச்சென்றுவிட்டார். இதனால் தொழிலதிபர் குடும்பம் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து சீமாவைக் கைதுசெய்தனர். சீமாவிடம் விசாரணை நடத்தியபோது சீமா மேட்ரிமோனியல் தளத்தில் விவாகரத்தான அல்லது மனைவியை இழந்த நபர்களை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம் என்று தெரிய வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் இது போன்று ஒவ்வொருவரையும் திருமணம் செய்து செட்டில்மென்ட் என்ற பெயரில், மொத்தமாக ரூ.1.25 கோடி பறித்து இருக்கிறார். அவர் மேற்கொண்டு எத்தனை பேரை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.