மும்பையில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி கடந்த 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தார். கரண் அர்ஜூன் உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கும் மம்தா குல்கர்னி மீது ரூ. 2000 கோடி போதைப்பொருள் வழக்கு நிலுவையில் இருந்தது. சோலாப்பூரில் 2000 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மம்தா குல்கர்னியின் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது. மம்தா, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் மம்தா குல்கர்னி மீதான வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மம்தா குல்கல்கர்னி 25 ஆண்டுகள் கழித்து மும்பை திரும்பி இருக்கிறார். மும்பை திரும்பி இருப்பது குறித்து மம்தா குல்கர்னி உணர்ச்சிப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், கும்பமேளாவில் பங்கேற்க தாய்நாட்டிற்கு 25 ஆண்டுகள் கழித்து வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு மும்பையில் விமானம் தரையிறங்கும் முன்பு வானில் இருந்து மும்பையை பார்த்தேன் என்றும் உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். "25 ஆண்டுகளுக்கு பிறகு நான் பிறந்து வளர்ந்த மண், வீட்டில் நிற்கிறேன். மும்பை அதிக அளவில் மாறிவிட்டது. சொந்த ஊருக்கு வந்திருப்பதாக உணர்கிறேன். எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
1990களில் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய மம்தா குல்கர்னி கடைசியாக 2002ம் ஆண்டு வெளிவந்த படத்தில் நடித்தார். அதன் பிறகு விக்கி கோஸ்வாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆப்பிரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மம்தா குல்கர்னிக்கு, மும்பை அந்தேரியில் சொந்த வீடுகள் இருக்கிறது. போதைப்பொருள் வழக்கில் அவரது வீட்டை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.