ஆன்லைன் ரம்மி தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தமிழக அரசைச் சாடியிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர், ``சென்னை சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் பெரும் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆகாஷை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகாஷ் பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு வேலை கிடைக்காத நிலையில், ஆன்லைன் ரம்மி ஆடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் அதன் மூலம் பணம் கிடைத்த நிலையில், மேலும் மேலும் பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாடி தம்மிடம் இருந்த பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் தொலைத்துள்ளார்.
கடைசியாக தமது தாயாரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்து ஆன்லைன் ரம்மி ஆடி இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு ஆகாஷ் தான் மோசமான எடுத்துக்காட்டு ஆவார்.
பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த ஓராண்டில் மொத்தம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகாஷ் ஆன்லைன் ரம்மிக்கு பலியான 17-ஆம் நபர் ஆவார்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதை ஐந்தே நாட்களில் விசாரணைக்கு கொண்டு வர முடிந்த தமிழக அரசால் தமிழ்நாட்டு மக்களை பலி கொண்டு வரும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை கோரும் மனுவை மட்டும் ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக்கு கொண்டு வர முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறுவதைப் பார்க்கும் போது, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் போலத் தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? என்பதே தெரியவில்லை.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.