The House of Common Sense (அறிவகம்) The Home of Proper Propaganda (பரப்புரைப் பணிமனை)
லூயிஸ் மிஷாவ்வின் தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடையின் பெயர்ப் பலகையில் இந்த இரண்டு வரிகள்தான் முதலில் இடம்பெற்றிருக்கும். இதன் கீழே, ஆஃப்ரிக்கர்கள் மற்றும் வெள்ளையர்கள் அல்லாத 200 கோடி மக்களின் உலக வரலாற்று நூல்களை விற்பனை செய்யும் புத்தகக் கடை எனப் பெரிய எழுத்துகளைக் கொண்ட பெயர்ப் பலகை நம்மை கடைக்குள் வரவேற்கும். உள்ளே செல்வதற்கு முன்பாக அந்த பெயர்ப் பலகையை உற்றுநோக்கினால் மேலும் சில தகவல்கள் புலப்படும். கடையின் பெயரும் அது முரசறையும் நோக்கமும் கடைக்குள் நுழையும் வாசகர்களுக்கு ஒரு முன் தீர்மானத்தைக் கொடுப்பதுபோல, நமக்கு ஒரு சித்திரத்தை வழங்கிவிடுகிறது.
கறுப்பர்கள், வெள்ளையர்கள் அல்லாத மக்கள் என ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் எழுத்துகளின் குவிமையமாக லூயிஸ் மிஷாவ்வின் புத்தகக் கடை விளங்கியது. பெயர்ப் பலகையில் சில புகைப்படங்களும் இருந்தன. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த 12 ஆஃப்ரிக்க நாடுகளின் தலைவர்களின் புகைப்படங்கள் அவை. பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருக்கும் இவை அனைத்தும், “வாசிப்பு - விடுதலையை நோக்கி…” என்பதைச் சொல்லாமல் சொல்லியது கடையின் முகப்பு.
லூயிஸ் மிஷாவ் புத்தக வியாபாரம் செய்ய முடிவெடுத்த 1930களின் இறுதியில் அமெரிக்க கறுப்பர்களின் சமூக, பொருளாதார நிலைமை மிக மிக மோசமாக இருந்தது. அடிமைத்தனம் சட்டப்பூர்வமாக காகிதத்திலிருந்து ஒழிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் நவீன அடிமைகளாக ஒடுக்கப்பட்டே வந்தனர். வெள்ளையர்களை அண்டிப் பிழைத்தால்தான் இந்தப் பூமியில் உயிரோடு வாழ முடியும் என்ற அச்சத்தால், ஒடுக்குமுறையிலிருந்து வெளிவர வேண்டுமென்ற பிரக்ஞை இன்றி படிப்பறிவில்லாதவர்களாக கறுப்பர் இன மக்கள் வாழ்ந்தனர். அவர்களை வாசிக்க வைத்து விழிப்படையச் செய்வது பெரும்பாடாக இருந்தது. ஒரு கறுப்பனிடமிருந்து ஏதாவதொன்றை மறைக்க விரும்பினால், அதை புத்தகத்துக்குள் ஒளித்து வைத்துவிட்டால் போதும், அது பத்திரமாக இருக்கும் என்று பிறர் சொல்லுமளவிற்குத்தான் கறுப்பர்களுக்கும் வாசிப்புக்குமான தொடர்பு இருந்தது. ஆமாம், புத்தகத்தை தொட்டுப் பார்க்கக்கூட விரும்பாத, சூழலிள்ளாத சமூகமாக கறுப்பினம் அப்போது இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் தன் மக்கள் அறிவு பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக லூயிஸ் மிஷாவ் புத்தகக் கடையைத் திறந்தார். 1930களில் கறுப்பர்கள் தொடர்பான புத்தகங்களை விற்பனை செய்ய தனியாகக் கடை எதுவும் அமெரிக்காவில் கிடையாது. தேவாலயங்களுக்கு வெளியே பைபிள், இயேசு கிறிஸ்துவின் படங்கள், கைவினைப் பொருட்கள், துணிகள் இவற்றோடு சேர்த்து புத்தகங்களையும் விற்பனை செய்து வந்தனர். அதேபோல கறுப்பின அமைப்புகள் நடத்தும் போராட்டக் களங்களில் கடை விரித்தும் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
கறுப்பர்களை வாசிக்க வைப்பதுதான் கறுப்பின எழுச்சிக்கான முன் நிபந்தனை என்பதை அறிந்த மிஷாவ், போராட்டத்தையும் வாசிப்பையும் ஒரே புள்ளியில் இணைக்க விரும்பினார். அதற்காகத் தனது கடை வாயிலைப் போராட்ட முனையாக மாற்ற முனைந்தார். கறுப்பர்களுக்காக, கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்த அந்தக் கடையில் நடைபெறும் புத்தக அறிமுகக் கூட்டமேகூட ஒரு போராட்ட வடிவம்தானே. தொடக்க நாட்களில் புத்தக அறிமுகக் கூட்டத்தை கடைக்கு உள்ளே நடத்தாமல், கடை வாயிலில் சாலையில் வைத்து நடத்தத் தொடங்கினார்.
ஹார்லெம் நகரின் ஏழாவது அவென்யூவை ஊடறுத்துச் செல்லும் சாலையின் 125வது தெரு முனையில், தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை அமைந்திருந்தது. பரபரப்பான அந்தச் சந்திப்பில், புத்தக அறிமுகக் கூட்டத்தை கடைக்கு வெளியே ஏற்பாடு செய்து, போவோர் வருவோரின் கவனத்தை ஈர்த்தார். இரு பக்கமும் படிகளைக் கொண்ட ஏணியை வைத்து அதன் மேல் ஏறி, புத்தக அறிமுகம் செய்பவர்களை பேசச் சொல்லி, ஒரு பொதுக்கூட்ட பரபரப்பை ஏற்படுத்தி கவனம் குவிக்கச் செய்தார். இப்படி தொடர்ந்து செய்து வந்ததன் விளைவாக நாளடைவில் எழுத்தாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள், மாணவர்கள் அடிக்கடி சந்தித்து விவாதிக்கும் களமாக புத்தகக் கடை மாறியது.
கறுப்பர்கள் அடர்த்தியாக வசித்த ஹார்லெம் நகரின் மையப்பகுதியில் புத்தக அறிமுகக் கூட்டத்தையே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தி வந்ததால், வாயில் கூட்டங்கள் என்ற பெயரில், கறுப்பின உரிமைகளுக்கான போராட்டங்களையும் இதேபோல நடத்த குடியுரிமை அமைப்புகளுக்கு மிஷாவ் தூண்டுகோலாக இருந்தார்.
கறுப்பின எழுச்சிக்கான பரப்புரைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவதற்கான உகந்த இடம், மிஷாவ்வின் புத்தகக் கடை வாசல் என கறுப்பின குடியுரிமை அமைப்புகள் கருதின. அந்தக் கடை வாசலிலிருந்து ஊர்வலம், பேரணி தொடங்கின அல்லது நிறைவடைந்தன. இறுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கடை முன்பாக நடைபெற்றது. கறுப்பின குடியுரிமை அமைப்புகளின் பிரபல தலைவர்கள் முதல், எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர், கானா அதிபர் க்வாமே நுக்ருமா உட்பட ஆஃப்ரிக்க நாடுகளின் அரசியல் தலைவர்கள் வரை மிஷாவ்வின் கடை முன்பாக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி இருக்கின்றனர்.
இப்படியாக, கடையின் வாயில் போராட்டங்களின் நுழைவாயிலாக உருமாறிய பிறகு, புத்தக விற்பனையாளர் என்ற தோற்றத்திலிருந்து மிஷாவ்வும் உருமாறி கறுப்பின தேசியவாதி என்ற பரிணாமத்தை வெளிக்கொணர மேடையேறி பேசத் தொடங்கினார். தன்னுடைய அங்கத பேச்சாலும் மதிநுட்பமான கேள்விகளாலும் வாசகர்களை சிந்திக்கத் தூண்டினார். மிஷாவ்வின் அபிமானிகள் அவரை பேராசிரியர் என அழைப்பதற்கு மிகப் பொருத்தமான நபர் தான் என்பதையும் தன் உரை வாயிலாக அவர் உணர்த்தினார்.
தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்ததால், நாளடைவில் அந்தப் பகுதிக்கு, ‘ஹார்லெம் சதுக்கம்’ என்ற பெயரே ஏற்பட்டு விட்டது. சிலர் ‘ஆஃப்ரிக்க சதுக்கம்’ என அழைத்தனர். போராட்டம் நடைபெறும் நேரங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்படுவதோடு, அந்தச் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்படும். அந்தளவுக்கு கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடிவிடும். கூடும் கூட்டத்தில் ஒரு சதவிகிதம் பேர் கடைக்குள் ஏறினாலும் போதும்தானே. புத்தக விற்பனை களைகட்டி விடுமே. இப்படியாக புத்தக விற்பனை தொடர்பான எந்த அனுபவமுமில்லாத ஒருவரால், ஐந்து புத்தகங்களோடு தொடங்கப்பட்ட, புத்தகக் கடை என்று சொல்ல முடியாத ஒரு வெற்றுக் கடை, வரலாற்றில் இடம்பெற்று அமெரிக்க அரசுக்கு அச்சுறுத்தல் தரும் அளவுக்கு சக்தி வாய்ந்த அறிவு கேந்திரமாக உருப்பெற்றது.
தன்னுடைய புத்தகக் கடையின் வாயில், போராட்டங்களின் நுழைவாயிலாக எப்படி மாறியது என்பதை லூயிஸ் மிஷாவ் விளக்கமாகக் கூறியதைக் கேட்டவுடன் சில புகைப்படக் காட்சிகள் என் நினைவுக்கு வந்தன. அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் அனல் தெறிக்கும் பேச்சாளராக வலம் வந்த மால்கம் x உரையாற்றும் புகைப்படம் ஒன்றில், அவர் தலைக்கு மேலே, The House of Common Sense, The Home of Proper Propaganda என்ற வரிகள் இடம்பெற்றிருந்ததை ஓர்மையில் கொண்டு வந்தேன். மால்கமுக்கும் மிஷாவ்வுக்குமான நெருங்கிய நட்பு குறித்து படித்தது சட்டென நினைவுக்கு வந்தது.
- பக்கங்கள் திறக்கும்