அமெரிக்காவில் அதானி, அவரின் உறவினர் சாகர் அதானி மற்றும் 6 உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதனால் அதானியின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கென்யாவில் அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதானி லஞ்சம் கொடுத்தது உண்மையாக இருந்தால் அவர் கைது செய்யப்படுவாரா?
சுமார் 2000 கோடி ரூபாய் அளவு இந்திய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது அமெரிக்க நீதியமைப்பின் நடுவர் மன்றம் (கிராண்ட் ஜூரி) .
அதானி நிறுவனம் அதற்கு லாபகரமான சோலார் மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றவியல் பிரிவின் இணை துணை அட்டர்னி ஜெனரல் லிசா ஹெச் மில்லர் தெரிவித்துள்ளார்.
குற்றப்பத்திரிகை மற்றும் நீதி விசாரணை
அமெரிக்க சட்டப்படி குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கு எதிரான விசாரணைகளுக்குப் பின்பு காவல்துறையினர் அரசு வழக்குரைஞருக்கு சாட்சியங்களை கிராண்ட் ஜூரிக்கு வழங்குகின்றனர்.
கிராண்ட் ஜூரி என்பது 23 பேர் வரை கொண்ட குழு. இவர்கள் அனுமதித்தால் மட்டுமே குறிப்பிட்ட குற்றவாளி மீது நீதிமன்ற விசாரணை நடைபெறும்.
கிராண்ட் ஜூரிகளுக்கு ஒருவர் குற்றவாளி அல்லது நிரபராதி என தீர்மானிக்கும் உரிமை இல்லை. அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் ஒருவரை குற்றவியல் நீதி விசாரணைக்கு உட்படுத்த போதுமானதா என்பதை மட்டுமே இவர்கள் தீர்மானிக்கின்றனர்.
அப்படி போதுமான சாட்சியங்கள் இருப்பதாக நினைத்தால் குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகளைத் தொகுத்து குற்றப்பத்திரிகையை உருவாக்குகிறார்கள். அந்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.
நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும். ஆனால் கிராட் ஜூரியின் நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெறுபவை.
அதானியின் வழக்கு கிராண்ட் ஜூரிகளால் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த தகுதி உடையாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற விசாரணை நடைபெறும்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்கவும், அவர் குற்றவாளி அல்லது குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கவும் நீதிமன்றத்துக்கே உரிமை உள்ளது.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுவதன்படி, அதானியின் கைது வாரண்ட்டை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்து அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் அடுத்ததாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
அதற்கு இரு நாடுகளின் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் அவரை ஒப்படைக்குமாறு அமெரிக்க வழக்கறிஞர்கள் இந்திய அரசிடம் கேட்க வேண்டும். அதானியிடம் லஞ்சம் பெற்றதும் இந்திய அதிகாரிகள் என்பதனால் இது சிக்கலானதாக இருக்கும். மேலும், ஒப்படைப்புக்கு எதிராகவும் அதானி இந்திய நீதிமன்றத்தில் வாதாட முடியும்.
கைது நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது அல்லது அமெரிக்க காவல்துறையால் அதானி மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படலாம் என நீதிமன்றம் கருதினால் ஒப்படைப்புக்கு எதிராக தீர்ப்பளிக்கப்படும். பல நடைமுறைகளுக்குப் பிறகு அதானி விவகாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே நீண்ட நாட்களாகும் எனக் கூறப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...