சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் நிலைய எல்லையில், புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை விருத்தாசலத்தை சேர்ந்த சக்திவேல் எனும் நபர் மது போதையில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் நேரில் சென்று சக்திவேலை விசாரணை செய்ததில், போதையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அதன் மூலம் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, அந்நபர் ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சக்திவேல் பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு,வெளியில்வந்து தனது வாயிலிருந்த பிளேடு துண்டினை வைத்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கழுத்தில் காயங்களுடன் இருந்த சக்திவேலை போலீஸார் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் கொச்சை வார்த்தைகளில் திட்டியதுடன், வாயில் பிளேடு துண்டு இருப்பதாகவும் முகத்தில் துப்பிவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் அந்நபருக்கு யாரும் சிகிச்சை அளிக்கவில்லை.
ஆகையால் போதை ஆசாமியை என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனையிலேயே விட்டுச்சென்றனர். பின்னர் அந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.