பாலஸ்தீன் நாட்டின் ஹமாஸ் குழு, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. அதற்கு அடுத்தநாள் முதல் இன்றுவரை பாலஸ்தீன் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாகப் போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலால் இதுவரை 44,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாலஸ்தீனின் பல பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
இஸ்ரேல் படையால் பாலஸ்தீனே போர்க்களமாகத் திகழும் இவ்வேளையில், 2026-ல் நடைபெறவிருக்கும் FIFA கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறும் கனவில் உறுதியாக இருக்கிறது பாலஸ்தீன் கால்பந்து அணி. தற்போது கால்பந்து உலகக் கோப்பைக்கான மூன்றாவது தகுதிச் சுற்றில், குரூப் பி-ல் இடம் பெற்றிருக்கும் ஆறு அணிகளில், நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு புள்ளிகளுடன் பாலஸ்தீன் கடைசி இடத்தில் இருக்கிறது.
இனிமேல், முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து நேரடியாகக் கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவது கடினம் என்றாலும், அதற்கடுத்த இரண்டு இடங்களுக்குள் (3, 4) வந்து நான்காவது தகுதிச் சுற்றுக்கு செல்லும் ஒரு வாய்ப்பு பாலஸ்தீனுக்கு இருக்கிறது. காரணம், குரூப் பி-ல் தற்போது நான்கு போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் ஓமன் அணியை விட ஒரு புள்ளிதான் பாலஸ்தீன் குறைவாகப் பெற்றிருக்கிறது.
மேலும், பாலஸ்தீனின் அடுத்த போட்டி நவம்பர் 14-ல் ஓமன் அணியுடன் என்பதால், எப்படியாவது இந்தப் போட்டியில் வென்று அடுத்த தகுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் பாலஸ்தீன் கால்பந்து அணி மும்முரமாக இருக்கிறது.
இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய பாலஸ்தீன் கால்பந்து சங்கத்தின் (PFA) தலைவர் ஜிப்ரில் ரஜோப், ``எங்கள் செயல்பாடுகள் மீதான இஸ்ரேலியர்களின் கட்டுப்பாடுகள், அனைத்தையும் முடக்கிவிட்டன. தேசிய அளவிலான லீக் ஆட்டங்கள் உட்பட அனைத்தையும் நாங்கள் தற்காலிகமாக நிறுத்தினோம். இருப்பினும், மற்ற போட்டிகளில் நாங்கள் பங்கேற்பதை வலியுறுத்தினோம். அதில், கால்பந்து உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றும் ஒன்று.
உண்மையில் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது. அது, காஸாவிலிருந்து எந்தவொரு விளையாட்டு வீரர்களையும் எங்களால் அழைத்து வர முடியவில்லை. அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டனர். காஸாவில் பெரும்பாலான கிளப்புகள், மைதானங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. மேற்குக் கரையில் (West Bank), அவர்கள் (இஸ்ரேலியர்கள்) எங்களை மூச்சுத் திணறடிக்கிறார்கள். எங்களால் எதுவும் செய்ய முடியாது.
ஆனாலும், கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறுவது எங்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு. எங்கள் அணியினர் நன்றாகச் செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். சில வீரர்கள் தங்களின் உயிரை அல்லது தங்களின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் உயிரை இழந்திருக்கின்றனர். உளவியல் ரீதியாக இது எங்களுக்குப் பாதிக்கும். இருப்பினும், நாங்கள் நன்றாக முயற்சி செய்து விளையாடுகிறோம். எங்களின் கால்பந்து வரலாற்றில், நாங்கள் மூன்றாம் நிலை தகுச் சுற்றுக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறை. இதுவே, எங்கள் வீரர்களுக்கு உந்துதலாக இருக்கும்." என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88