BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 October 2024

இந்தியா Vs கனடா: தூதரக ரீதியில் மீண்டும் மோதல்... என்ன நடக்கிறது?

கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் நடந்த ஒரு கொலை, இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான நட்பில் பெரும் விரிசலை உண்டாக்கியிருக்கிறது. சில மாதங்களாக அடங்கியிருந்த இந்த மோதல் விவகாரம், தற்போது மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

என்ன பிரச்னை?

2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி அன்று, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியிலுள்ள குருத்துவாராவின் கார் பார்க்கிங்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியரான ஹர்தீப் சிங், `காலிஸ்தான் புலிப் படை' அமைப்பின் தலைவர் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாபின் ஜலந்தரிலுள்ள சிறு கிராமத்தில் பிறந்த ஹர்தீப், 1990-களின் மத்தியில் போலி பாஸ்பார்ட் மூலம் கனடாவை அடைந்ததாகத் தெரிகிறது. முதலில் அங்கு பிளம்பர் வேலை பார்த்தவர், பின்னர் குருத்துவாரா ஒன்றின் தலைவராக பணி செய்திருக்கிறார். தனி நாடு கேட்டுப் போராடும் காலிஸ்தான் அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்ட ஹர்தீப், வெகு விரைவில் கனடாவிலுள்ள சீக்கியர்கள் மத்தியில் பிரபலமானவராக உருவெடுத்திருக்கிறார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான, `சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டதால், ஹர்தீப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ). பஞ்சாப் காவல்துறையிலும் இவர்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் ஹர்தீப்பின் ஆதரவாளர்கள், `இந்திய அரசு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது' என்று கூறிவந்தனர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

ஹர்தீப் கொலையும்... ட்ரூடோ குற்றச்சாட்டும்..!

இந்த நிலையில், ஹர்தீப்பின் கொலை குறித்து கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசின் ஏஜென்ட்டுகளுக்கு நம்பகமான தொடர்பிருப்பதாகக் கனடா உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. கனடா மண்ணில், கனடாவின் குடிமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் தொடர்பிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இது சுதந்திரமான, வெளிப்படையான ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணானது'' என்று தெரிவித்தார்.

மேலும், ஜி-20 மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்தபோது, இந்த விஷயம் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும் ட்ரூடோ கூறியிருந்தார். இதையடுத்து, கனடாவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி பவன் குமார் ராயை, நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது கனடா அரசு.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை, ``கனடா பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்றுகள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். கனடாவில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்வது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. கனடாவில், கொலை, மனிதக் கடத்தல், ஆர்கணைஸ்டு க்ரைம்களுக்கு இடமளிப்பது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்ற குற்றங்களுடன் இந்தியாவை தொடர்புப்படுத்துவதை முற்றிலும் நிராகரிக்கிறோம்'' என்று கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இந்தியாவின் கனடா தூதரக அதிகாரி ஆலிவர் சில்வெர்ஸ்டரையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து, சில காலத்துக்கு கனடா மக்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்திவைத்தது இந்திய அரசு.

மீண்டும் வெடித்த மோதல்!

சில காலம் அடங்கிப் போயிருந்த இந்த மோதல் விவகாரம் மீண்டும் பெரிதாகியிருக்கிறது. கனடா அரசு சார்பில், ``இந்திய தூதரக அதிகாரி சஞ்சய் குமார் வர்மாவுக்கும், சில இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பிருக்கிறது'' என்று தகவல் அனுப்பியதோடு, இந்தியாவை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் கடுங்கோபமடைந்த இந்தியா, ``36 ஆண்டுகள் தூதரக அதிகாரியாக பணியாற்றிய சஞ்சய் வர்மாமீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அவமதிக்கிறது கனடா. இது அனைத்தும் அபத்தமான குற்றச்சாட்டு. தூதர்களுக்கு கனடாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், எங்கள் தூதரக அதிகாரிகளை திருப்பி அழைக்கிறோம்.

ட்ருடோ, பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கிறார். இந்தியாவை தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தும் நபர்களை அமைச்சரவையில் வைத்திருக்கிறார்'' என்று குற்றம்சாட்டியதுடன், இந்தியாவுக்கான கனடா தூதர்கள் ஆறு பேரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதாக அறிவித்திருக்கிறது. கனடாவும், இந்தியத் தூதர்களை தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய்

லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்பு?

இந்த நிலையில் கனடா காவல்துறையோ, இந்தியச் சிறையிலுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கேங் உடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள், கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் பகீர் கிளப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், ``கனடா மண்ணில் கனடியர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை ஆதரிக்கலாம் என இந்திய அரசு எண்ணியதே அடிப்படை தவறு. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்தியாவிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்ததால், தூதரரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியா, திசை திருப்பு அறிக்கைகளை வெளியிடுவதை விட்டுவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்'' என்றிருக்கிறார்.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளோ, ``ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, எதிர்வரும் தேர்தலில் தோல்வியடையும் நிலையில் இருக்கிறது. எனவேதான், கனடாவில் ஆதிக்கம் செலுத்தும் சீக்கியர்களை தனது வாக்கு வங்கியாக மாற்றிக்கொள்ள இப்படி அரசியல் நாடகமாடுகிறார். ஆனால், 2025 தேர்தலில் நிச்சயம் அவர் தோல்வியடைவார். பின்னர், இந்தியா - கனடா உறவு மீண்டும் மேம்படத் தொடங்கும்'' என்கிறார்கள்.

ஜஸ்டின் ட்ரூடோ
இந்தியா, கனடாவின் அடுத்தடுத்த அதிரடிகளால், இருநாட்டு மக்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் சிறு பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. எனவே, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்!


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies