மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தப் பகுதி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எத்தனை ஆண்டுகளுக்குத்தான் போர்க்கால நடவடிக்கை எடுப்பீர்கள்? இது ஒரு அடிப்படை பிரச்னை. இங்குள்ள மக்கள் அழுது கொண்டே சொல்கிறார்கள், எந்த கண்மாயுமே தூர்வாரப்படவில்லை. ஆழப்படுத்தப்படவில்லை. நீர் ஓடிய கால்வாய்களையெல்லாம் சிமெண்ட் பூசி சுருக்கி விட்டீர்கள், அதனால் அதிகளவு நீர் செல்ல வாய்ப்பில்லை, இது போன்று நகருக்குள் வந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
மழை இல்லாமல் நமக்கு எதுவும் இல்லை. உங்களுடைய கையாலாகத்தனத்துக்கு யார் மீதாவது பழி போடவேண்டும் என்பதற்காக மழை மீது பழி போடுகிறார்கள்" என்றவர், த.வெ.க மாநாடு குறித்து பேசும்போது, "நான் 13 வருடத்திற்கு முன்பாக இதே கோபத்துடன்தான் அரசியலுக்கு வந்தேன். அதற்கு பின்னாடி தற்பொழுது தம்பி வந்துள்ளார்" என்றவரிடம்,
"விஜயோடு கூட்டணி சேர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா?" என்ற கேள்விக்கு
"இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை, தேசியம், திராவிடக் கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் தேசியர்களான நாங்கள் கட்சி ஆரம்பித்தது, அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல, படம் எடுத்து பிழைக்க வந்தவன், கடமையை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டு அதனை செய்கிறேன்.
திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னாரென்றால் அது எங்கள் கொள்கைக்கு எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல, அது வேறு, இது வேறு. இது என் நாடு, என் தேசம் இங்கு வாழ்கின்ற மக்களுக்கான அரசியலே தமிழ் தேசிய அரசியல்.
மொழிக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. கொள்கை மொழி என்பது எங்கள் தாய் மொழிதான், பாடமொழி பயிற்றுமொழி எல்லா மொழியும் எங்களுக்கு தமிழ் மொழி தான். தேவையென்றால் ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம் அதனை கொள்கையாக எடுத்துக் கொள்வது ஏற்க முடியாது" என்றார்.
"விஜய்யை மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா?" என்ற கேள்விக்கு,
"அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கருத்தியல் புரட்சி மூலமாக தான் மக்களை வென்றெடுக்க முடியும். என்னைப்போன்று செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்லி விளக்கம் அளிக்க தெரிய வேண்டும், ஒரு பிரச்னைக்கு வேரும், தீர்வும் தெரிய வேண்டும்.
பெரியாரை ஏற்கும்போது திராவிடத்தை ஏற்கிறீர்கள், அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிடமாடல் என்கிறார்கள், நாங்கள் அதனை திருட்டு மடல், தீஞ்சு போன மாடல் என்கிறோம். திராவிடம் என்பது சமஸ்கிருதம், மாடல் என்பது ஆங்கிலம். தமிழ்நாட்டில் தமிழன் அறம் சார்ந்த ஆட்சி, தமிழர் ஆட்சி என்று சொல்ல உங்களால் முடியவில்லையே, இது என்ன மாடல் ?” என்றார்.
"ஆட்சியில் பங்கு என விஜய் பேசியதை வி.சி.க, நா.த.க-விற்கான அழைப்பாக பார்க்கலாமா?" என்ற கேள்விக்கு,
"ஆட்சியிலும் பங்கு அதிகாரம் பங்கு என்பது நீண்ட நாளாக உள்ள கோரிக்கை, நாங்களும் எழுப்பியதுதான். நான் தெளிவான கொள்கை உடையவன். என் பயணம் என் கால்களை நம்பித் தான். அடுத்தவர் கால்களை நம்பி உங்கள் பயணத்தை தொடங்காதீர்கள் என்ற தத்துவத்தை படித்தவன் நான். என்னுடைய இலக்கை நோக்கி பயணிக்கும்போது உங்களுடைய கால்களை நம்பி பயணிக்க முடியாது. நான் திருப்பத்தூர் போக வேண்டும் என்றால், நீங்கள் திருப்பூர் போனால் என் பயணம் வெற்றி அடையாது. என் இலக்கு, என் நோக்கம் என்ன எனக்கு தெரியும். என்னுடைய கனவு என்பது என் முன்னோர்களுடைய கனவு, அதை நிறைவேற்ற போராடுகிறேன்" என்றார்.
"விஜய் முதலமைச்சர் ஆக வாய்ப்புள்ளதா?" என்ற கேள்விக்கு,
"அதை காலம்தான் தீர்மானிக்கும், மக்கள் கையில்தான் இருக்கிறது, இப்போது அதை பேசுவது தேவையில்லை. நாங்கள் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம், தம்பி இப்போது வந்திருக்கிறார், அவரை வாழ்த்த வேண்டும்.”
"பெரியாருடைய கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என விஜய் கூறுகிறாரே?"
"விஜயின் பேச்சை முழுமையாக கேட்கவில்லை. ஆனால், போனில் சிறிது கேட்டேன். பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை, பகுத்தறிவை ஏற்கிறேன் என்கிறார். பகுத்தறிவு கொள்கையில் தான் கடவுள் மறுப்பும் உள்ளது. பெண்ணிய உரிமையை ஏற்பேன் என்கிறார். பெரியார் எங்களுக்கு பெண்ணிய உரிமையை போதிக்கவில்லை பெரியார் பிறப்பதற்கு முன்பாகவே எங்களுடைய முன்னவர்களின் முன்னுரிமை பெண்ணுரிமைதான், வேலு நாச்சியார் தான் பெண்ணுரிமையை முதலில் கொண்டு வந்தவர்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY