ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வரை இஸ்ரேல் ராணுவப் படை கொன்றுவிட்டதாக அறிவித்தது. சரி, போரை நிறுத்துவதற்கான வலுவான காரணம் கிடைத்துவிட்டதாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் கருதின. ஆனால், போர் தொடரும் என அறிவித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஆனால், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் மக்களில் ஒரு பகுதியினர் ஏற்கவில்லை. இஸ்ரேல் மக்கள் இரண்டு தரப்பாக, நெதன்யாகு அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறார் நெதன்யாகு.
இரண்டு தரப்பு இஸ்ரேல் மக்கள் இரண்டு காரணங்களுக்காக இஸ்ரேல் அரசை எதிர்க்கிறார்கள்.
போரை நிறுத்த வேண்டுமென ஒரு தரப்பு மக்கள் வலியுறுத்துகின்றனர். 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் படையினர், இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில், 1,139 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் பணயக் கைதிகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாகத்தான், காஸாவில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.
பணயக் கைதிகளாக இருந்த பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலரை, தற்காலிக போர் நிறுத்தம் உட்பட சில சந்தர்ப்பங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்தது ஹமாஸ். இருப்பினும், இன்னும் 100 பேர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் பெஞ்சமின் நெதன்யாகு ஈடுபட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏற்கெனவே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் கொல்லப்பட்டுவிட்டனர். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வரும் கொல்லப்பட்டுவிட்டார். இனி, போரை நிறுத்துவிட்டு, ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 100 இஸ்ரேலியர்களை மீட்க வேண்டும் என்பதே போராடும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
"அரசியல் தீர்வை நோக்கி செல்லாமல், தாக்குதலை மட்டும் நடத்திக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. மீறி அதை அவர் தொடர்கிறாரென்றால் அது சுயநல காரணங்களுக்காகத்தான் இருக்கும்" என போராடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலில் சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கை தக்க வைக்கவே, பிரதமர் நெதன்யாகு போரை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைக்கின்றனர். அந்த விமர்சனத்தையே, போராடும் மக்களும் பிரதிபலிக்கின்றனர்.
ஏற்கெனவே, ஹமாஸ் ஒரு ஒப்பந்தத்துக்கு முன்வந்தது. பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றால், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. ஆனால், அதற்கு இஸ்ரேல் உடன்பட மறுத்துவிட்டது. இப்போது, அவர்களை மீட்க வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இதையும், நெதன்யாகு தவறவிட்டால், அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் போராடும் மக்கள்.
மற்றொருபுறம், யூதர்களில் ஒரு பிரிவினரான ஹரேடிம் சமூக மக்கள், இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். யூத மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் ஹரேடிமர்கள். இவர்களை Ultra Orthodo Jews என்கிறார்கள். யூதர்களின் புனித நூலான தோராவை படிப்பதையே இவர்கள் தங்கள் வாழ் நாள் கடமையாக கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கென்று அரசுப் பள்ளி இருக்கிறது. அங்கு, அறிவியல், கணிதம் போன்ற பிற பாடங்களை இவர்கள் படிக்கமாட்டார்கள். பல்வேறு சலுகைகளையும், இச்சமூகத்தினருக்கு அரசு வழங்கி வருகிறது.
பெரும்பாலும் இவர்கள் வெளியுலக தொடர்பில்லாமல், தனித்து வாழ்வார்கள். ஆண்கள், கோட்டும், தொப்பிகளையும் அணிந்திருப்பார்கள். பெண்கள் நீள உடையும், தலையை மறைத்தும் உடை அணிந்திருப்பார்கள். இப்படி, எல்லா வகையிலும் சமூகத்திலிருந்து தனித்து இருப்பவர்கள்தான் ஹரேடிம் மக்கள்.
இவர்களுக்கு, இஸ்ரேல் ஒரு சிறப்பு சலுகை கொடுத்திருக்கிறது. `இறைதூதர் வருவார், இஸ்ரேலை காப்பார்’ என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அண்மையில் இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு இவர்களின் முக்கிய சலுகையை பறித்திருக்கிறது. அது என்ன? ஹரேடிம் மக்களின் யூத மத நம்பிக்கைகளும், அதை அவர்கள் பின்பற்றும் விதத்தைப் பற்றியும் பின்வரும் வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்.