மலையாள திரையுலகில் முன்னணி நடிகை மாலா பார்வதி. பீஷ்ம பர்வம், கோதா, டேக் ஆஃப், மாலிக், நீலதாமரா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சமீபத்தில் தான் டிஜிட்டல் கைது செய்யப்பட்டது தொடர்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவரின் பதிவில், ``மதுரையில் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது என் அலைபேசி எண்ணுக்கு ஒருவர் வீடியோ கால் செய்தார். அதில் பேசியவர் தன்னை மும்பை போலிஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டார். என் ஆதார் எண்ணில் 12 மாநிலங்களில் வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், அந்த வங்கிக் கணக்குகள் மூலம் பணமோசடி நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அது தொடர்பாக விசாரிக்கவே அழைத்ததாகவும் கூறினார். எனக்கு சற்று நேரத்தில் பதற்றம் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்துக்கொண்டிருந்தது.
இது தொடர்பாக என்ன செய்வது, சட்ட ரீதியாக யாரிடம் உதவி கேட்பது என தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மும்பை குற்றப் பிரிவு போலீஸ் ஐடி கார்டை காண்பித்து, பிரகாஷ் குமார் குண்டு என்பவர் என்னை தொடர்புகொண்டு, `இந்த வழக்கிலிருந்து உங்களை சுமூகமாக வெளியேற்ற முயற்சிக்கிறோம். ஆனால், அதற்கான ஒரு தொகையை நீங்கள் வழங்க தயாரா..?
இது சட்ட சிக்கலானால், பெரும் பிரச்னையாகும் என்பது உங்களுக்கே தெரியும்... நல்ல முடிவாக கூறுங்கள்' என்பது போல பேசினார். அப்போதுதான் என் உதவியாளர், மும்பை குற்றப் பிரிவு போலீஸ் ஐடி கார்டில், அசோக தூண் சக்கரம் இருக்கும். அதில் அப்படியான எதுவும் இல்லை என்பதை கவனித்தார். உடனே இது மோசடி முயற்சி என்பதையும் அறிவுறுத்தினார். அதன்பிறகே அதிலிருந்து வெளியே வந்து புகார் அளித்தோம். எனவே, அனைவரும் கவனமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.