இத்தாலியில், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் குப்பையிலிருந்து சேகரித்த ஓவியமானது, உண்மையில் பிக்காசோ (Picasso) வரைந்த ஓவியம் என்றும், அதன் இன்றைய மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டிருப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, பழைய பொருள்களைச் சேகரிக்கும் விற்கும் லூய்கி சோ ரோசோ என்பவர் 1962-ல், கேப்ரி தீவில் ஒரு குப்பையிலிருந்து ஓவியம் ஒன்றை கண்டெடுத்திருக்கிறார். அது என்ன ஓவியம், யார் வரைந்தது என எதுவும் அறியாத லூய்கி சோ ரோசோ, நேராக அதை பாம்பீயிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு கொண்டுவந்து மாட்டியிருக்கிறார்.
தன்னுடைய மனைவிக்கு அந்த ஓவியம் பிடிக்காதபோதும், அவர் தனது வீட்டில் மாட்டியிருந்தார். ஒரு கட்டத்தில், லூய்கி சோ ரோசோ இறந்தபிறகு அவரின் நினைவாக அவருடைய மனைவி பத்திரமாக வைத்திருந்தார். இருப்பினும், அவர்களின் மகன் ஆண்ட்ரியா லோ ரோஸ்ஸோவுக்கு சிறுவயது முதலே, அந்த ஓவியம் யார் வரைந்தது, என்ன ஓவியம் அது என ஆராய்வதில் ஆர்வமாக இருந்தார். இறுதியில், தனது தந்தை இறந்த பிறகு அந்த ஓவியத்தை ஆராயும் முயற்சியில் அவர் இறங்கினார். தற்போது 60 வயதுடைய அவர், ஓவியத்தின் இடது மூலையில் இருந்த கையொப்பத்தைக் கண்டவர், இதுபற்றி முழுமையாக ஆராய சிறந்த கலை ஆய்வாளர்கள் குழுவின் ஆலோசனையை நாடினார்.
அக்குழுவில், நன்கு அறியப்பட்ட கலை துப்பறியும் மவுரிசியோ செராசினி மற்றும் பலர் இருந்தனர். பல வருட சிக்கலான ஆய்வுகளுக்குப் பிறகு, ஓவியவியலாளரும் ஆர்காடியா அறக்கட்டளையின் அறிவியல் குழுவின் உறுப்பினருமான சின்சியா அல்டீரி, ஓவியத்திலிருந்த கையொப்பமானது புகழ்பெற்ற வரலாற்று ஓவியர் பிக்காசோவின் கையொப்பம் என்றும், அது அவர் வரைந்த ஓவியம் என்றும் உறுதிப்படுத்தினார். மேலும், அந்த ஓவியத்தின் இன்றைய மதிப்பு 5 மில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.54 கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சின்சியா அல்டீரி, ``ஓவியத்தின் மற்ற ஆய்வுகள் முடிந்த பிறகு, அதிலிருக்கும் கையொப்பத்தை ஆய்வு செய்வதற்கு ஓவியம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் அதைப் பல மாதங்கள் ஆய்வுசெய்து, பிக்காசோவின் உண்மையான படைப்புகளுடன் ஒப்பிட்டேன். அது அவரது கையொப்பம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போலி என்று கூறுவதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை.'' என்று தெரிவித்தார்.
அதேபோல், ஆண்ட்ரியா லோ ரோஸ்ஸோ, ``என் தந்தை இந்த ஓவியத்தை நான் பிறக்கும் முன்பே கண்டுபிடித்தார். பிக்காசோ யார் என்பது பற்றி எதுவும் அவருக்குத் தெரியவில்லை. என் தந்தையிடம் நான் தொடர்ந்து அது பிக்காசோ பாணியில் இருக்கிறது என கூறிக்கொண்டிருந்தேன். ஆனால், அவர் புரிந்துகொள்ளவில்லை. நான் வளர வளர, அந்த ஓவியத்தின் மீது பல சந்தேகங்கள் எழுந்தது. பின்னர், அந்த ஓவியம் ஆச்சர்யப்படுத்தியது.'' என்றார்.
மேலும், தெற்கு இத்தாலிய தீவான கேப்ரிக்கு அடிக்கடி பிக்காசோ பயணித்திருப்பதாகவும், 1930 முதல் 1936-க்கு இடையில் அவர் வரைந்த ஓவியங்களின் பாணியுடன் இந்த ஓவியம் ஒத்துப்போவதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்த ஓவியத்தில் இருப்பவர், பிரெஞ்சு புகைப்படக் கலைஞரும் ஓவியருமான டோரா மாரின் உருவப்படம் என்றும் கூறப்படுகிறது. பிக்காசோ தனது வாழ்நாளில் 14,000-க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். தற்போது இந்த ஓவியம், பிக்காசோ அறக்கட்டளையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெறவும் காத்திருக்கிறது.