BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 October 2024

பூப்போட்ட ஷர்ட்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

துபாயிலிருந்து வள்ளி அன்று காலை தான் வந்திருந்தாள். வள்ளியின் அம்மா தங்கதிற்கு புதிதாக சிறகு முளைத்திருக்குமோ என வியக்கும்படி பம்பரமாய் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் கவனித்தாள்.

காபி, டிபன் ஆன கையோடு, வள்ளி அம்மாவிடம்," வாம்மா இங்க வந்து பாரு. உனக்கு என்னெல்லாம் வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்னு." என சின்னப்பிள்ளையாக் கையை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

" என்ன அவசரம் வள்ளி? குளிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு மூட்டையைப் பிரியேன்.! ராத்திரியெல்லாம் தூங்காம விமானத்துல வந்தது," என்றாள்.

" வாம்மா! நான் துபாய் போனதுல இருந்து குருவி மாதிரி இதையெல்லாம் வாங்கி சேர்த்து வச்சிருக்கேன். ரெண்டு வருஷமா இந்த நாள் எப்ப வரும்னு காத்துக் கிடந்தது உனக்கு என்ன தெரியும்? வாம்மா", இழுத்துச் சென்றாள்.

Representational Image

பெட்டியைத் திறந்து ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துப் போட்டாள். அதை வாங்கப் போன தினம் நடந்த கதை, எந்த மாலில் வாங்கினாள், எத்தனை தினார் மாப்பிள்ளை கொடுத்தார் என அதிக ஆவலுடன் தொடர்ந்து பேசினாள்.

பேரப்பிள்ளைகளும் அம்மாவின் அதிகப்படியான ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தவண்ணம் பாட்டியின் மடியில் உட்கார்ந்தார்கள்.

"அங்க நீங்க கட்டற மாதிரி பொடவை கிடைக்கலை. இதெல்லாம் கொஞ்சம் வழுவழுன்னுதான் இருக்கும். ஆனா உங்களுக்கு நல்லா இருக்கும். இத கட்டிக்கறப்பவெல்லாம் என்னை நினைச்சுப்பீங்களாம்மா?"

"என் கண்ணே, இதைக் கட்டிகிட்டா தான் நினைக்கணுமா?

எனக்கு எப்பவுமே உன் நினைப்புத் தான்டி. உன்னை விட்டா எனக்கு நினைக்க யாரிருக்கா? உனக்கு ரெண்டு வயசாகும் போது உங்க அப்பாரு போய் சேர்ந்திட்டார். உனக்காக தான்டி உசிரைக் கையில பிடிச்சு வச்சிருக்கேன்.", அம்மாவின் குரல் தழுதழுத்தது.

வள்ளிக்குத்தான் மறக்குமா என்ன?

அப்பா இறந்ததும் அம்மா பாட்டி வீட்டுக்கு வந்ததும் மாமா அரவணைப்பில் வளர்ந்ததும், எததனையோ விஷயங்களுக்காக ஏங்கியதும்...!நல்ல புது சட்டை போட்டதாக கூட ஞாபகம் இல்லை.

பெரியம்மா மகளும், சித்தி மகளும் போட்டு , பழசாய் போன பாவாடைகள் தான் இவளுக்கு வந்து சேரும். அவர்கள் பாட்டி வீட்டுக்கு வரும் போது எல்லாம், "நீ போட்டுட்டு இருக்கிற என்னோட பாவாடை இல்ல. இது எப்பவோ வாங்கினது. இப்போ இது ஃபேஷனே இல்லையே..”, நாலுபேர் முன்னால் சொல்லி சிரிப்பார்கள்.

அவர்கள் இப்போது போட்டிருக்கும் பாவாடையை வள்ளி நைஸாகப் பார்த்தாள்.

" இப்போ நல்லக் கலராத் தான் இருக்கு. எங்கிட்ட வரும் போது தான் சாயம் போயி பழசாகிடுது. இவங்க பணக்காரங்க தானே? ஒரு வருஷத்துலயே இதை தூக்கி எனக்கு குடுத்துட்டு வேற வாங்கிக்க வேண்டியது தானே?" என நினைத்தாள்.

"வானவில் பாவாடை இப்போ பாஷன் ஆச்சே? வாங்கிக்கிட்டியா?", அவளுக்கே அல்பமாகத் தெரிந்தாலும் ஆர்வத்தில் கேட்டு விட்டாள்.

"பெரிம்மா நல்ல சோப் பவுடர் போட்டு தோய்ச்சு, நிழலில் காய வையுங்க. துணி சாயமே போகாது", என்றாள்.

" சாயம் போகலைன்னா உனக்கு ஏன்தரப் போறோம்? அப்புறம் உனக்குப் போட்டுக்கத் துணியே இருக்காதே.” என பெரியம்மா இளக்காரம் பண்ணும்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அடுத்த இம்சை மாமாவின் பழைய பாண்ட் ஷர்ட்டுகளை அல்டர் பண்ணி போட்டுக்கொள்வது தான்.. ஷர்ட் பழசானாலோ போட்டு அலுத்தாலோ, அதுவும் வள்ளிக்கே வந்து விடும். வள்ளி அதை அல்ட்ர் பண்ணி சின்னதாக்கிக் கொள்வாள்.

அது பார்க்க கண்றாவியாய் இருக்கும். பெரிய காலரும் இடது பக்கத்தில் பாக்கெட்டுமாய்....

பள்ளியில் எல்லாம் கேலி பண்ணுவார்கள்.

"ஏய் வள்ளீ உங்க மாமாவை இளைக்கச் சொல்லுடி. அப்பத்தான் உனக்கு தச்ச சட்டை மாதிரி இருக்கும்." என்பார்கள்.

Representational Image

தீபாவளியின் போது மட்டும் தான் இவளுக்கு புது டிரெஸ். எப்படா தீபாவளி வரும்னு ஆவலாய் உட்கார்ந்திருப்பாள். இருபபதிலேயே சீப்பாய் ஒரு பாவாடை சட்டை எடுத்துத் தருவான் மாமன்.

மாமாவுக்கு ஷர்ட் எடுக்கும் போது வள்ளி மிகவும் ஆர்வமாய் போய்த் தேடுவாள்.

அந்த ஆர்வம் தன் டிரெஸ் எடுக்கும் போது கூடக் காட்டமாட்டாள். விஷயம் அதிலே இல்லாமல் இல்லை.

ஆணகள் போடுகிற மாதிரி கட்டம், கோடு என்று தான் மாமா எடுத்துக் கொள்வான்.

ஒவ்வொரு முறையும் வள்ளி பூ போட்ட டிஸைனைக் காட்டி "மாமா இது உங்களுக்கு நல்லா இருக்கும்", என்பாள். சரியென சொல்ல மாட்டானா என்ற ஆசையுடன்.

திரும்பி பார்த்து அவன் முறைக்கிற முறையில் வாய் அடங்கிவிடும்.

ஆனாலும் மனம் " எனக்குப் பிடிச்ச பூ போட்ட அந்த நீலச் சட்டையை மாமா எடுக்கணுமே" என வேண்டியபடி நிற்பாள். "ஆஞ்சநேயா, தோட்டதுல இருந்து வெற்றிலை பறிச்சு மாலை போடறேன். மாமாவுக்கும் அந்த சட்டை பிடிக்கணுமே".

அவள் வெற்றிலையை திருடித்தான் மாலைப் போட வேண்டும் என்பது தெரிந்தோ என்னவோ ஆஞ்சநேயர் அவள் கோரிக்கையை என்றுமே செவி மடுத்ததில்லை.

கொஞ்சம் வள்ர்ந்து, பத்தாவது படிக்கும் போது, மாமாவின் பேண்ட் கூட ஒஸி கிடைத்தது. ஆம்பிளை பேண்ட் என பார்தாலே தெரியும். ஆனாலும் அவளுக்கு சைக்கிள் ஓட்ட வசதியாக இருந்ததால், அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

எப்படியோ காலேஜ் படித்து, பாங்க் வேலைக்கும் போனாள். கூட வேலைப் பார்த்த நடராஜன் அவள் பொறுமையை பார்த்து பெண் கேட்டு வந்தான்.

ஒரே சமூகம், தன் கையை விட்டு செலவு பண்ண வேண்டியதில்லை என்பதாலேயே மாமன் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டான்.

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, நடராஜன் துபாயில் வேலைக் கிடைத்து வள்ளியையும் கூடக்கூட்டிப் போனான். பாட்டி செத்ததும் அம்மாவுக்கு மாமா வீட்டில் அவன் மனைவியுடன் இருப்பது கஷ்டமாக இருந்தது.

கையில் இருந்த பணத்துடன் கொஞ்சம் லோன்போட்டு சென்னையில் பிளாட் வாங்கி அம்மாவைக் குடி வைத்தாள்.

"ம்..ம்.." பழைய கதையை நினைத்துப் பார்தத வள்ளி பெருமூச்சு விட்டாள்.

"வள்ளி இந்த பூ போட்ட ஷர்ட் யாருக்குடி? இந்த காலத்துல ஆம்பிளைங்க எல்லாம் இது மாதிரி தான் போட்டுக்கிறாங்க... என்ன பேஷனோ? பொம்பளைங்க போடற மாதிரி இருக்கு", என்றாள் தங்கம்.

"உந்தம்பிக்குத்தான். இப்போ ஆம்பிள்ளைகளுக்கு , அது தான் பேஷன். மாமா பேஷனாத் தான்ல உடுத்தும்? அதான் பூ போட்ட ஷர்ட் வாங்கிட்டு வந்தேன்”, என்றாள் வள்ளி அந்த காலத்து பூப்போட்ட ஷர்ட்டை நினைத்தப்படியே.

-கீதாஷங்கர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies