கர்ப்ப காலத்தில் ஒருக்களித்துதான் படுக்க வேண்டுமா, ஏன் நேராக படுக்கக்கூடாது, எந்த வாரத்திலிருந்து குழந்தையின் அசைவை உணர முடியும், நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டால் நார்மல் டெலிவரி ஆகாதா என்பதுபோன்ற எக்கச்சக்க கேள்விகள் கர்ப்பிணிகளின் மனதில் எழும். அவற்றுக்கு பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை.
ஏன் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்?
ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தையின் உடல் எடையானது ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை இருக்கும். இதனால் அம்மாவின் வயிற்றின் மேல் அழுத்தம் ஏற்படும். இந்த நேரத்தில், நேராகப் படுத்து உறங்குவது கர்ப்பிணிகளுக்கு சற்று சிரமமாக இருக்கும். அதனால்தான், வீட்டில் உள்ள பெரியவர்கள் கர்ப்பிணிப் பெண்களை இடதுபுறம் ஒருக்களித்து தூங்கும்படி சொல்வார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா? கர்ப்பிணிகள் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்கும்போது, உடலில் உள்ள பெரிய ரத்தக்குழாய்களான அயோடா (aorta) மற்றும் இன்ஃபிரியர் வீணாக்கேவா (inferior vena cava) போன்றவற்றின் மேல் அழுத்தம் குறையும். இதனால், கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். விளைவு, தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கும் தேவையான ரத்தம் செல்லும். ஆகையால், தேவையான சத்துகள் கிடைத்து குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு சிறப்பான பொசிஷன்!
கர்ப்பிணிகள் உறங்குவதற்கு சிறப்பான பொசிஷன் எதுவென்றால், இதைச் சொல்லலாம். கால்களை மடக்கி வயிற்றுக்கு அருகில் வைத்துகொண்டு, கருவில் இருக்கும் சிசுபோல உறங்கினால் சற்று இதமாக இருக்கும். தலையணையை இரு கால்களுக்கு இடையில் வைத்தோ அல்லது வயிற்றுக்கு முன்பக்கமாகவோ அல்லது முதுகுபக்கமாகவோ வைத்து உறங்கினால், ஆழ்ந்த உறக்கம் மேம்படும். 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியும் மேம்படும். சரியான பொசிஷனில் படுக்கவில்லை என்றால், ஆழ்ந்த உறக்கம் வராது. குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
குழந்தையின் முதல் அசைவு எப்போது தெரியும்?
கர்ப்பக் காலத்தில் ஒவ்வொரு தாயும் உணர விரும்பும் ஓர் அற்புதமான விஷயம், குழந்தையின் அசைவு. முதல் முறையாக கருத்தரித்த அனைத்து தாய்மார்களுமே இந்தத் தருணத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள். பொதுவாக குழந்தையின் அசைவு 16 முதல் 18 வாரத்திற்குள் தெரியும். நீங்கள் முதல் முறையாக கருத்தரித்திருக்கிறீர்கள் என்றால், 16-ல் இருந்து 20 வாரத்திற்குள் அசைவு தெரிய ஆரம்பித்து விடும். இதுவே இரண்டாவது முறை என்றால், சற்று முன்னதாகவே தெரியும். பொதுவாக சாப்பிட்டப் பிறகும், தூங்கி எழுந்தப் பிறகும் சிசுவின் அசைவை நன்கு உணர முடியும்.
எட்டு மாதமான கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8-லிருந்து 12 முறையாவது குழந்தையின் அசைவு தெரிய வேண்டியது அவசியம். குழந்தையைச் சுற்றியுள்ள நீர் குறைந்தாலோ, போதிய ஆக்சிஜன் குழந்தைக்கு கிடைக்கவில்லை என்றாலோ குழந்தையின் அசைவு குறையும். தாய்க்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை இருந்து, கர்ப்பத்தின்போது அதன் அளவு அதிகரித்தால் குழந்தை இறந்து பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, குழந்தையின் அசைவினை கவனிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
கொடி சுற்றிக் கொண்டால் நார்மல் டெலிவரி ஆகாதா?
கர்ப்பிணியின் வயிற்றில் பனிக்குட நீர் அதிகமாக இருந்தாலோ, நஞ்சுக்கொடி நீளமாக இருந்தாலோ அல்லது சிசு அம்மாவின் வயிற்றுக்குள் வேக வேகமாக அசைந்தாலோ, நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இதை ஸ்கேனில் கண்டுபிடித்து விட முடியும். இப்படி நஞ்சுக்கொடி சுற்றிக் கொண்டால் நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பில்லை என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. குழந்தையின் இதயத்துடிப்பு நார்மலாக இருக்கிறது; அம்மாவுக்கு பிரசவ வலி வர வர குழந்தையின் தலை கீழிறங்கிக் கொண்டிருக்கிறது என்றால், கொடி சுற்றியிருந்தாலும் நார்மல் டெலிவரிதான் நடக்கும். குழந்தையின் இதயத்துடிப்பு குறைகிறது. ஆனால், பிரசவத்துக்கு நேரம் இருக்கிறது எனும்போது தான் சிசேரியன் செய்வோம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை.