தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகம் திராவிட பூமி. திராவிடத்தை பேசாமல் இங்கு அரசியல் செய்ய முடியாது. அதனால்தான் 50 ஆண்டுகளைக் கடந்து இங்கு திராவிடம் மட்டும்தான் ஆட்சி செய்கிறது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடமில்லை. இங்கு திராவிடத்தை வைத்துதான் அரசியல் செய்ய முடியும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பெயர்களைச் சொல்லாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது. இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய்யும் அவரது கட்சி மாநாட்டில் அதையேதான் சொல்லி உள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி செய்கிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. அவர்கள் மக்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனரா என்று பார்க்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் பேசியுள்ளார். அரசியல் ரீதியாக பார்த்தால் கிட்டத்தட்ட அ.தி.மு.க-வின் கொள்கைகளைத்தான் விஜய் கூறியுள்ளார்.
அ.தி.மு.க-வை குறை சொல்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. தமிழக அரசியல் களத்தில் என்றைக்குமே அ.தி.மு.க-வுக்கு தி.மு.க எதிரிதான். எனவே, தி.மு.க எங்களை குறை சொல்வார்கள். ஆனால், மற்ற கட்சிகள் அ.தி.மு.க-வை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் எங்களிடம் குறைகள் இல்லை. நிறைகள்தான் உள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு அ.தி.மு.க-வைப் பற்றியோ, இரட்டை இலை சின்னம் குறித்தோ பேசத் தகுதி கிடையாது.
அவரை அடையாளம் காட்டியது அ.தி.மு.க-தான். அவர் அ.தி.மு.க-வை எதிர்த்து போட்டியிட்டது மோசமான செயல். தன்னை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்ததால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியிலும் மக்கள் நிராகரித்தனர். எனவே, மனசாட்சி ரீதியாக இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றிருக்க கூடாது.” என்றார்.