BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 24 October 2024

குடும்பக் கட்டுப்பாடு: கவலையில் தெற்கு... கை ஓங்கும் வடக்கு... தீர்வு என்ன?

மக்கள் தொகைக் கட்டுக்கடங்காமல் பெருகுவது, பொருளாதாரத்துக்கு ஆபத்து. இதை உணர்ந்துதான், உலக அளவில் பிறப்பு விகிதத்தைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், ‘நாம் இருவர், நமக்கு இருவர்’, ‘ஒன்று பெற்றால் ஒளிமயம்... அதிகம் பெற்றால் அல்லல் மயம்’ என்றெல்லாம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு, இந்தியாவில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. குறிப்பாக, தென் மாநிலங்களில் எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளின் பலன், பொருளாதார வளர்ச்சியில் நன்றாகவே எதிரொலித்தது. ஆனால், வடமாநிலங்களில் அத்தனை தீவிரம் காட்டப்படவில்லை. இது, தற்போது தென் மாநிலங்களின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக மாறி, மிரட்ட ஆரம்பித்திருக்கிறது!

‘தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு விகிதம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடவும் குறைந்திருப்பது, டெமோகிராபிக்கல் இம்பேலன்ஸை உண்டாக்குவதோடு, நாடாளுமன்ற மக்களவையில் தென்னிந்தியாவின் பங்களிப்பையும் குறைக்கும்’ என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கவலையை வெளியிட்டதோடு, ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் உண்டு’ என்றும் கூறியுள்ளார்.

‘குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்ளச் சொன்னது தவறோ என்று இப்போது யோசிக்க வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். அதிகமான பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது என்பது நேற்றைக்கே சாத்தியமில்லை என்கிற நிலையில்தான், குடும்பக் கட்டுப்பாடு என்பதே கையில் எடுக்கப்பட்டது. இன்று, செலவுகளைச் சமாளிக்க முடியாத அளவுக்கு விலைவாசிகள் உயர்ந்து உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் எப்படி அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் முன்வருவார்கள்.

அதேசமயம், தென்மாநில முதலமைச்சர்களின் அச்சத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற பிரதிநிதித் துவத்தைத் தீர்மானிப்பது தொடர்பான மத்திய அரசின் முன்னெடுப்புகள்தான் அது. ஆனால், இந்தக் காரணத்துக்காக மக்கள் தொகை கட்டுப்பாடு என்பதிலிருந்து விலக ஆரம்பித்தால், இவ்வளவு காலமும் நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சுக்குநூறாகிவிடும். கிடைத்த பலன்களும் பாழாகிவிடும். இந்த விஷயத்தில், ‘அரசியல்’ என்பதை மட்டுமே மனதில் கொண்டு, வட மாநிலங்களில் அதிக தொகுதிகளை உருவாக்குவதன் மூலம், எப்போதுமே ஆட்சியில் இருக்கலாம் என பா.ஜ.க அரசு திட்டமிட்டால்... ஆட்சி இருக்கும்; நாடும், நாட்டு மக்களும் இருக்க மாட்டார்கள். பொருளாதார சிக்கல் எனும் புதைகுழி நம்மை விட்டுவைக்காது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே அடையாளம்’ என்றெல்லாம் பேசும் மத்திய அரசு, எல்லா மாநிலங்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதுதான், நம்முடைய பொருளாதார மேம்பாட்டை நிலைநிறுத்தும். இதை மனதில் வைத்து, அனைத்து மாநில அரசுகளையும் அழைத்து, இந்த விஷயத்தில் ஒருமனதாக ஏற்கக்கூடிய உருப்படியான தீர்வைக் கண்டறிவதுதான் அதை உறுதிப்படுத்தும்!

- ஆசிரியர்



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies