ஆந்திரப் பிரதேசம் மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்தியா முழுவதும் கோவில்களில் பிரசாதம் வழங்க உபயோகப்படுத்தும் பொருள்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய 'சனாதன தர்ம சான்றிதழ்' வழங்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் இருப்பதாக எழுந்த பிரச்னையை முன்னிட்டு இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார் பவன்.
திருப்பதியில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மம் மீது அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டுவதற்கு எதிராகப் பேசினார்.
கோவில் நடைமுறைகளின் புனிதம் மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக சனாதன தர்ம சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனப் பேசினார். அதுமட்டுமல்லாமல், மாநில அளவிலும் தேசிய அளவிலும் "சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்" அமைக்கப்பட வேண்டும், அதன் மூலம் சனாதன தர்மத்தின் கொள்கைகளைப் பாதுகாத்து, நாடு முழுவதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய பவன் கல்யாண், "பாரதம் முழுவதும் உடனடியாக வலிமையான தேசிய சட்டத்தைக் கொண்டுவந்து, சனாதன தர்மத்தைப் பாதுகாத்து, அதன் நம்பிக்கைகளுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க வேண்டும். " என்றார்.
வாராகி பிரகடனம் என்ற பெயரில் சில தீர்மானங்களையும் வெளியிட்டுள்ளது ஜனசேனா கட்சி. அதில், "மாநில, மொழி பிரிவினைகளைக் கடந்து சனாதனத்தைத் தாக்குபவர்களுக்கு எதிராக சனாதனிகள் (இந்துக்கள்) ஒன்றுபட வேண்டும்" என அழைப்புவிடுத்துள்ளார் பவன் கல்யாண்.
மேலும், "ராகுல் காந்தி அயோத்தி விழாவை 'ஆடல் பாடல் நிகழ்ச்சி' என்றார். நீங்கள் சனாதன இந்துக்களைக் காயப்படுத்திவிட்டு ஆட்சிக்கு வர அவர்களின் வாக்குகளைக் கேட்கிறீர்களா? நீங்கள் மோடியை வெறுக்கலாம், எங்களை வெறுக்கலாம், ஆனால் ராமரை வெறுக்கத் துணியாதீர்கள்" என ராகுல் காந்தியை விமர்சித்தார் பவன் கல்யாண்.
மேலும் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக, "சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்... உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்திலிருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்துப் போவீர்கள். உங்களைப் போல நிறையப் பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது." எனப் பேசியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...