தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் நடைபெற்ற போதைஒழிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நவராத்திரி கொண்டாட்டம், தீமையை அழித்து மக்களுக்கு நன்மை, வெற்றியை கொடுக்கக்கூடிய நிகழ்வாகும். பொதுவாக நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒவ்வொரு நாள் மாலையும் ராஜ்பவனில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். நன்மை, தீமைகளை பிரித்துக்காட்டி எல்லோருக்கும் வெற்றியைத் தேடித்தரும் இந்த பூஜையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் ராஜ்பவனை விட்டு நவராத்திரி நாட்களில் வெளிவருவதில்லை. ஆனால் சங்கரன்கோவிலில் நடைபெறும் இந்த போதைஒழிப்பு பொதுக்கூட்டம் என் மனதிற்கு மிக நெருக்கமாக அமைந்துவிட்டது. அதற்காகவே இங்கு வந்தேன். நவராத்திரி பூஜை வழிபாடு எதற்காக செய்யப்படுகிறதோ அதை ஒத்த நன்மையைத்தான் இந்த விழிப்புணர்வுக்கூட்டம் தரவல்லது.
அதிகரித்து வரும் போதை பயன்பாடு பழக்கவழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிவதை நேரில் பார்க்கிறேன். இந்த சமூகமும் சீரழிவை சந்தித்து வருகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகள் நம் கண்முன்னே நிறைய உள்ளன. போதைப்பொருள் புழக்கத்தால் நான் அனைவருமே மிகப்பெரிய சிரமங்களை சந்தித்து வருகிறோம். போதைபழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு புகைப்பிடித்தல், மது, புகையிலை உள்ளிட்ட மற்ற வகைகளில் நாம் விலகியிருக்க வேண்டும். தற்போது உள்ள காலகட்டத்தில் போதை பொருள்கள் நிறைய வடிவங்களில் சந்தையில் ஊடுருவியுள்ளது. ஓ.பி.எம்., ஹெராயின், ஹசீஸ், மெத்தபெட்டமின், மெத், போன்ற கெமிக்கல் வடிவங்களிலும், சிந்தடிக் வகைகளிலும் போதைபொருட்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பள்ளி-கல்லூரி மாணவர்கள்தான். மாணவர்களை தொடர்ந்து தற்போது போதைப்பழக்கத்திற்கு மெல்ல, மெல்ல மாணவிகளையும் சீரழித்து வருகிறது. மாணவர்கள், விளையாட்டாக ஆரம்பிக்கும் போதைப்பழக்கம் மிக குறுகிய காலத்திலேயே அவர்களின் வாழ்வை போதை பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.
போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களின் சுயத்தை இழந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபடுவதில் ஆரம்பித்து பெரிய பெரிய குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இளம் தலைமுறை எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. கெமிக்கல், சிந்தெட்டிக் போதைப்பொருள் ஒருபக்கம் என்றால் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்துஉள்ளது. இந்த கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். மத்திய புலனாய்வு அமைப்புகள் நூற்றுக்கணக்கான டன் அளவில் கெமிக்கல் மற்றும் சிந்தெட்டிக் போதைப்பொருள்களை பறிமுதல் செய்கின்றனர். நான் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது.
மத்திய புலனாய்வு அமைப்புகள் சிந்தெட்டிக் மற்றும் கெமிக்கல் போதைப் பொருள்களை பறிமுதல் செய்வதுபோல தமிழ்நாடு அரசு ஏன் கஞ்சாவை பறிமுதல் செய்ய முடிவதில்லை. இதற்கான காரணம்தான் என்ன?. போதைப்பொருள்கள் புழக்கமானது, தேவை மற்றும் சப்ளையின் அடிப்படையில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆகவே இங்கு, போதைப்பொருளின் தேவை உருவாவதை முதலில் குறைக்க வேண்டும். சர்வதேச அளவிலான கடத்தல் கும்பல்கள், போதைப்பொருள்களை சப்ளை செய்வதன் மூலம் பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். போதைப் பொருள் சப்ளை செய்து சம்பாதிக்கும் பணத்தின் மூலமாக தீவிரவாதத்தை வளர்க்கின்றனர். போதைப்பொருள் கடத்தல்கள் பாகிஸ்தான், தமிழ்நாடு, துபாய் வழியாகத்தான் அதிக அளவில் நடைபெறுகிறது என மத்திய புலனாய்வு அமைப்புகள் ஆய்வில் உறுதிசெய்துள்ளனர். இந்தியாவை சுற்றி பரந்துவிரிந்துள்ள கடல்வழியாகத்தான் சர்வதேச சந்தைகளுக்கும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறது. சர்வதேச சந்தைகளுக்கு இலங்கை, இந்திய எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறும் வேளையில் இந்தியாவிற்குள்ளும் போதைப் பொருள் புழக்கத்திற்காக சட்டவிரோதமாக கடத்திக்கொண்டுவரப்படுகிறது.
நாடுமுழுவதும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதைக்கு எதிராக பெரிய இயக்கமாக இயங்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். இளைஞர்களின் போதைப்பழக்கம் தனிப்பட்ட முறையில் அவர்களின் எதிர்காலத்தை மட்டும் பாதிப்பதில்லை. அந்த இளைஞரை நம்பிய குடும்பத்தின் வளர்ச்சியையும், பெற்றோர்களின் கனவையும், கல்வியையும் சீர்குலைக்க கூடியது. ஆகவே உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தை ஏமாற்றிவிடாதீர்கள்.
இந்திய தேசிய ராணுவத்திற்கு பஞ்சாபில் இருந்து அதிக அளவிலான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை பார்த்திருக்க முடியும். அதற்கு காரணம் பஞ்சாபில் போதை கட்டுப்பாடு மற்றும் ஒழிப்புக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் அதேசமயம் மற்ற இடங்களில் இருந்து குறைவான அளவிலேயே ராணுவத்திற்குள் இளைஞர்கள் நுழையமுடிகிறது. பெரும்பாலான இளைஞர்கள் 500 மீட்டர் தூரம் ஓடுவதற்கு கூடமுடியவில்லை. ஆகவே போதைப்பழக்கம் இளம் தலைமுறையினர் வாழ்க்கையை அடியோடு சீரழிக்கிறது. இதைமாற்றி புத்துணர்ச்சியான சமுதாயத்தை உருவாக்க ஆரம்பநிலையில் இருந்தே போதைக்கு எதிரான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களை உள்ளடக்கி போதைக்கு எதிரான குழுவை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.