தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன், வயது 33. இவர், அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக இருக்கிறார். கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் இவர் இந்த பதவியில் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீபன், 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவரை, தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததுடன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த தீபன், மீண்டும் கிண்டல் செய்து, சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் போலீஸார் தீபன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.