மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது. ஆனால், கட்சிகள் இன்னும் முழுமையாகத் தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் இருக்கின்றன. மற்றொரு புறம் தங்களது கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மாற்றுக்கட்சிகளுக்குத் தாவிக்கொண்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தபோது, கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அஜித் பவாருக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் கொடுக்கப்பட்டது. சரத் பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) என்ற பெயர் கொடுக்கப்பட்டு புதிய சின்னமும் கொடுக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் சரத்பவார் மகளும், துணை முதல்வர் அஜித்பவாரின் மனைவியும் போட்டியிட்டனர். இதில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார். இத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பாராமதி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அஜித்பவார் தயங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் போட்டியிடாவிட்டால் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துவிடுவார்கள் என்பதால் அஜித்பவார் பாராமதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித்பவார் இரண்டாக உடைத்த பிறகு, பவார் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டுவிட்டது. பவார் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் சரத்பவாரை ஆதரிக்கின்றனர். அஜித்பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவார் தொடர்ந்து சரத்பவாருக்கு ஆதரவாகவே இருக்கிறார். அதோடு ஸ்ரீனிவாஸ் பவாரின் மகன் யுகேந்திர பவார் மக்களவைத் தேர்தலில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேயின் வெற்றிக்காகத் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் செய்தார். இதையடுத்து அவரையே பாராமதி தொகுதியில் நிறுத்த சரத்பவார் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே யுகேந்திர பவார் பாராமதியில் போட்டியிடுவதற்காகக் கடந்த சில மாதங்களாகத் தீவிர வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது அவர் பாராமதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. யுகேந்திர பவார் பாராமதியில் போட்டியிடக் கட்சியின் அதிகாரப்பூர்வக் கடிதத்தை சரத்பவார் கொடுத்துவிட்டார். கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், சரத்பவாரின் மற்றொரு பேரன் ரோஹித்பவார், முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாத், மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் மகன் ரோஹித் பாட்டீல், மும்பை தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் ராகி ஜாதவ் உட்படப் பலருக்குத் தேர்தலில் போட்டியிட சரத்பவார் கட்சியின் அதிகாரப்பூர்வக் கடிதத்தைக் கொடுத்து இருக்கிறார். இத்தேர்தலால் சரத்பவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்பவார் கட்சியிலிருந்து அதிகமானோர் சரத்பவார் கட்சிக்குத் தாவிக்கொண்டிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs