சேலம் மாநகரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 5000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அப்படி வரும் நோயாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை என்கிறார்கள். காரணம், தினந்தினம் செல்போன் திருட்டு, பைக் திருட்டு சம்பவங்கள் என குற்றசம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் நேற்று மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை பிரிவில் ஒரு பெண் தாக்கப்பட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் தனது தாயுடன் நேற்று இரவு 9 மணியளவில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் அடிப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது சித்தப்பாவை சந்திக்க வந்துள்ளார். அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் ஜெயந்தியை தலை முடியை இழுத்துப்போட்டு தாக்கியுள்ளார். அப்போது உறவினர்கள் தடுத்தும் அந்த நபர் ஜெயந்தியை விடாமல் தாக்கியுள்ளார்.
பின்னர் அக்கம்பக்கத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் உறவினர்கள் ஓடிவந்து ஜெயந்தியை அந்நபரிடமிருந்து மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீஸார் விசாரணை செய்தனர். அதில், தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், ஜெயந்தியின் அண்ணன் என தெரியவந்தது. அதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர் மதுபோதையில் இருந்ததால் போலீஸார் அந்நபரை கண்டித்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான ஜெயந்தி, ``நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஆடையெல்லாம் கிழித்து அசிங்கப்படுத்தி, கொலை வெறியுடன் தாக்கிய நபர் மீது நடவடிக்கை வேண்டும்” என்று போலீஸாரிடம் கூறியுள்ளார் அதற்கு புகாரெல்லாம் வாங்க முடியாது என்று போலீஸார் சொன்னதாக குற்றம்சாட்டுகிறார்கள் ஜெயந்தி தரப்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயந்தியிடம் பேசியபோது, “எனக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. நான் கலப்புத்திருமணம் செய்தேன் என்ற காரணத்திற்காக எனது அண்ணன் கார்த்தி 17 வருடமாக பேசாமல் இருந்தார். நானும் அப்படி தான் இருந்தேன். மற்றப்படி எனது உறவினர்கள் அனைவரும் என்னிடம் நல்லாதான் பேசுவாங்க. அதன்மூலம் தான் இன்று எனது சித்தப்பாவை பார்க்க வந்தேன். ஆனால் வந்த இடத்தில் கொலை வெறியுடன் என்னையும், எனது அம்மாவையும் கார்த்தி தாக்கினார். அதுலயும் என்னை பொதுவெளியில் ஆடையை கிழித்து அசிங்கப்படுத்தி அடித்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது அவர்கள், என்னிடம் `அதெல்லாம் வேண்டாம் சும்மா போம்மா, அவன் இனிமேல் எதாவது பிரச்னை செய்தால் இந்த செல் நம்பருக்கு கால் பண்ணுன்னு’ சொல்றாங்க. ஆனால் நான் பாதிக்கப்பட்டது தொடர்பாக கொடுத்த புகாரை வாங்காமல் என்னை சமாதானப்படுத்தி அனுப்புறாங்க. ” என்று கதறி கண்ணீர் வடித்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவனை காவல் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டு பேசினோம், அப்போது நம்மிடம் பேசிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி, ``சார் அது குடும்பப் பிரச்னை, அக்கா - தம்பிக்குள் தகராறு. இதில் நாங்க என்ன செய்யமுடியும். அதான் அந்த பையனை கண்டித்து அனுப்பினோம். இன்னும் அந்தப்பொண்ணு கண்டித்தது பத்தலைன்னு சொன்னா காலையில் வர சொல்லிருக்கோம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs