சட்ட மேதை அம்பேத்கர் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, 1950-ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தின் முகப்புரையில், ``இறையாண்மை (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு (Republic)' என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகம் இடம்பெற்றிருந்தன. அதன்பின்னர், எமெர்ஜென்சி காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால், 1976-ல் இந்திய அரசியலமைப்பில் 42-வது திருத்தத்தின் ஒருபகுதியாக, அரசியலமைப்பின் முகப்புரையில் ஏற்கெனவே இருந்த வார்த்தைகளுடன், `மதச்சார்பற்ற (Secular), சோசலிஸ்ட் (Socialist) என்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட்டது.
இன்றுவரையில், இறையாண்மை, ஜனநாயக, குடியரசு, மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட முகப்புரையே நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும், கடந்த செப்டம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளின் முகப்புரையில் மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இவ்வாறிருக்க, இந்திரா காந்தியால் முகப்புரையில் சேர்க்கப்பட்ட மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரி முன்னாள் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய், பல்ராம் சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ``இந்தியா மதசார்பற்ற நாடக இருப்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா?'' என்று மனுதாரர்களிடம் நீதிமன்ற அமர்வு கேள்வியெழுப்பியது.
அதற்கு, ``பழங்காலத்திலிருந்தே இந்தியா மதசார்பற்றதுதான். எமெர்ஜென்சி காலத்தில் மக்களின் விருப்பம் இல்லாமல் இந்திரா காந்தி அரசால் அந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. சோசலிசம் என்ற வார்த்தையைச் சேர்ப்பது தனிப்பட்ட சுதந்திரத்தைக் குறைக்கும் என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்" என்ற வாதங்களை மனுதாரர்கள் முன்வைத்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற அமர்வு, ``இந்த நீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில், மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மதச்சார்பின்மைக்கு எதிரான சட்டங்களை இந்த நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
சோசலிஸ்ட் என்ற வார்த்தையை மேற்கத்திய அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்கத்திய அர்த்தத்தின்படி நீங்கள் சென்றால், அது வேறுபட்ட பொருளைக் கொண்டிருக்கும். நாம் அதைப் பின்பற்றவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் நாட்டின் வளங்களைச் சமமாக அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுப்பதே சோசலிசம்" என்று குறிப்பிட்டு அடுத்த விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY