இந்திய விமானப்படை 92 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் மெரினாவில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.
இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்திருந்தனர். கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரில் கண்டு ரசித்திருக்கின்றனர். 'உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி' என்பதற்காக இந்த நிகழ்ச்சி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பெற்றிருக்கிறது. சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கின்றனர். விமான நிகழ்ச்சியை மக்கள் பார்வையிட தமிழக அரசு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். "இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம். முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரின் நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது.
5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு. தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb