கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலை மலுமிச்சம்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அங்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பிரபு (19) என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை திடீரென விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்தார். சக மாணவர்கள் பதறியடித்து சென்று பார்த்தபோது, பிரபு கை,கால்களில் எலும்பு உடைந்து, தலைப் பகுதியிலும் பலத்த காயமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபு சற்று வித்தியாசமானவர். அவர் தனக்கு சூப்பர் ஹீரோ பவர் இருப்பதாக கற்பனையில் நினைத்து வந்துள்ளார். தன்னால் கட்டடம் விட்டு, கட்டடம் குதிக்க முடியும் என்றும் அவர் நம்பியுள்ளார்.
எந்தக் கட்டடத்தில் இருந்தும் குதிக்க முடியும் என்று தன் நண்பர்களிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். அதைத் தொடர்ந்து தான், நேற்று 4வது தளத்தில் இருந்து அருகில் உள்ள மாடிக்கு குதித்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பிரபுவுக்கு பிளாக் மேஜிக்கிலும் நம்பிக்கை இருந்துள்ளது.
தனக்கு எதிராக யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர் என்றும் அவர் தன் நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர் மாடியில் இருந்து குதிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.