BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 23 October 2024

வைத்திலிங்கம்: 15 மணி நேர ED ரெய்டு; 7 மணிக்கு உள்ளே சென்ற பிரின்டர், லேப்டாப் - ஆவணங்கள் சிக்கியதா?

ஏறுஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்தநிலையில் வைத்திலிங்கம் 2011- 2016 ம் ஆண்டுகளில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி நிறுவனம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்தனர். இதற்கான அனுமதி கொடுப்பதற்கு வைத்திலிங்கம் அந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கத்தினர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்தனர்.

வீட்டில் வைத்திலிங்கம்

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வைத்திலிங்கம் தரப்பு, 2016 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் அவரது மகன்கள் பிரபு மற்றும் சண்முகபிரபு இயக்குனர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெயரில் கடன் வாங்குவது போல் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

வங்கி கணக்கின் மூலம் வைத்திலிங்கம் லஞ்ச பெற்றது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் 2011ல் ரூ 32.47 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது 1,057 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் இது குறித்த தகவலை ஆதாரங்களுடன் அமலாக்கதுறைக்கு அனுப்பியுள்ளனர். இதைதொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆதரவாளர்களுடன் வெல்லமண்டி நடராஜன்

ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள வைத்திலிங்கம் வீடு, தஞ்சாவூர் அருனானந்த நகர் 7வது விரிவாக்கத் தெருவில் உள்ள வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு வீடு, பேய்க்கரம்பன்கோட்டையில் உள்ள வைத்திலிங்கத்தின் மைத்துனரும், பிரபுவின் மாமனார் பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் ஈடுப்பட்டனர். வைத்திலிங்கம் வீட்டில் அதிகாரிகளான வளர்மதி, கிருஷ்ணகுமார் தலைமையில் சோதனை நடைபெற்றது. இங்கு மட்டும் 13 பேர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவர் வீட்டு முன்பு காத்திருந்தனர். அ.தி.மு.க-வினரும் வைத்திலிங்கம் வீட்டில் நடப்பதை தங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் ஆர்வமாக கேட்டு தெரிந்த வண்ணம் இருந்தனர். வைத்திலிங்கத்தின் காரை திறந்து சோதனை செய்ததுடன், வீட்டை சுற்றிலும் வலம் வந்தனர் அதிகாரிகள். கைலி அணிந்திருந்த வைத்திலிங்கம் சோதனை தொடங்கும் போது வெளியே வந்து தன் ஆதராவளர்களை பார்த்து கையசைத்து விட்டு உள்ளே சென்றதுடன் சரி அதன் பிறகு வெளியே வரவே இல்லை.

சோதனை முடிந்த பிறகு வெளியே வந்த வைத்திலிங்கம்

அவ்வப்போது அவரது மகன் ஆனந்த்பிரபு மட்டும் வாசல் வரை வந்து பார்த்து விட்டு சென்றார். பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்ததால், அமலாக்கத்துறையினர், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். பின்னர் பன்னீர்செல்வத்தின் உறவினர் முன்னிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். இதே போல், பிரபு வீட்டிற்கு நான்கு அதிகாரிகள் சென்றனர் அங்கு பிரபு இல்லை. அவரது மனைவி, மகன், மாமியார் மட்டும் இருந்தனர். அமலாக்கத்துறை வந்திருக்கும் தகவல் அவருக்கு சொல்லப்பட்ட உடனே வந்த அவரை உள்ளே அழைத்து சென்றனர்.

பின்னர், மனைவி மற்றும் மாமியார், மகன் ஆகியோரை அமலாக்கத்துறை காரிலேயே பேய்கரம்பன்கோட்டைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து பிரபுவை மட்டும் தனியாக விசாரித்துள்ளனர். வைத்திலிங்கம் வீட்டில் உள்ளே சில அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தாலும் போர்டிகோவில் சில அதிகாரிகள் போன் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தனர். அமலாக்கத்துறையை சேர்ந்த ஒருவர் அவ்வப்போது வெளியே வந்து யாரிடமோ போனில் பேசிக் கொண்டே இருந்தார்.

வைத்திலிங்கம் வீடு

12.30 மணியளவில் வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி வந்து வீட்டுக்கு உள்ளே செல்ல முயல அவரை அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் சுற்று சுவரை பிடித்து கொண்டு நின்றவர் பின்னர் உட்கார்ந்து விட்டார். வீட்டின் முன்பு திரண்டிருந்த அனைவருக்கும் மதிய உணவாக வெரைட்டி ரைஸ் கொடுத்தனர். அமலாக்கத்துறையினர் தங்களது டிரைவர் மூலம் சிக்கன் ரைஸ் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டனர். நேரம் ஆக ஆக எப்போது ரெய்டை முடித்து விட்டு அதிகாரிகள் வெளியே வருவார்கள் என ஆதரவாளர்கள் பலரும் முனு முனுத்தனர். இதுவரைக்கும் டிரெய்லர் தான் இனிமேல் தான் மெயின் பிக்சர் என்பது போல் இரவு 7 மணிக்கு பிறகு பிரின்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றை உள்ளே எடுத்து சென்றனர்.

இதையடுத்து வைத்திலிங்கம் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றியதாக பரபரப்பு கிளம்பியது. வைத்திலிங்கம், பிரபு வீடுகளில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய ரெய்டு இரவு சுமார் 10.45 மணியளவில் நிறைவுப்பெற்றது. கிட்டதட்ட 15 மணி நேரம் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிந்ததும் வெளியே வந்த அமலாக்கத்துறையினரை பெண் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பினார்.

சோதனை முடித்து வெளியே வந்த அமலாக்கத்துறையினர்

பின்னர் வந்த வைத்திலிங்கத்தை பார்த்து 'உங்களுக்கு நாங்க இருக்கோம்' என அங்கிருந்த ஆதரவாளர்கள் சூழ்ந்து கொள்ள எல்லோருக்கும் நன்றி சொன்னார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், " வந்தார்கள் ஆய்வு செய்தார்கள், என்னிடம் சில கேள்விகளை கேட்டனர் அதற்கு முறையாக பதில் சொன்னேன். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். வீட்டிலிருந்து எதையும் எடுத்து செல்லலவில்லை" என கூறிவிட்டு உள்ளே சென்றவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை திட்டி தள்ளிவிட்டனர். இதைதொடர்ந்து மெயின்சாலைக்கு வந்து சாலையில் உட்கார்ந்து எதிர்ப்பை பத்திரிக்கையாளர்கள் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies