தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதல்வராக தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவிருக்கிறார். இதற்கு முன் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது மகன் ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது போல, இன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
அதுவும் சட்டமன்ற உறுப்பினரான ஒன்றரை வருடத்தில் அமைச்சர், அமைச்சரான ஒன்றரை வருடத்தில் துணை முதல்வர் என்று சீனியர் அமைச்சர்களை உதயநிதி ஓவர்டேக் செய்திருக்கிறார்.
அதேசமயம், `கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதால்தான் எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர் என இவ்வளவு சீக்கிரம் உதயநிதி உயர்த்தப்பட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க வாரிசு அரசியல்' என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க அமைச்சர் மா.சுப்பிரமணியன் இத்தகைய விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய மா.சுப்பிரமணியன், ``தி.மு.க-வின் ஒட்டுமொத்த தொண்டர்களின் எதிர்பார்ப்பைத் தமிழக முதல்வர் நிறைவு செய்திருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவொரு மகிழ்ச்சி நிறைந்த நாள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை இன்று ஒரு தலைமையகமாக மாற்றியிருக்கிறார். அதேசமயம் வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் இதனை விமர்சிப்பதுதான் சரியாக இருக்கும்" என்றார்.