முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக் குறி வைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. தெற்கு ஃப்ளோரிடாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 58 வயதான ரியான் விஸ்லி ரூத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது ட்ரம்பின் கோல்ஃப் மைதான எல்லையில் இருந்த சீக்ரட் சர்வீஸ் ஏஜென்ட்கள் குற்றவாளியை நோக்கிச் சுட்டுள்ளனர். ஏஜென்ட்களிடம் இருந்து கருப்பு நிற காரில் தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தில் உயர் சக்திவாய்ந்த ஏகே 47, ஸ்கோப்வ் மற்றும் கோப்ரோ கேமரா கண்டெடுக்கப்பட்டது. காரில் தப்பியவரைச் சாட்சிகளின் உதவியுடன் துரத்திப் பிடித்துள்ளனர்.
ரியான் வய்ஸ்லி ரூத்
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிப்பதன்படி, ரியான் ரூத், நார்த் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் கட்டடத் தொழிலாளி. தற்போது ஒரு நிறுவனம் வைத்திருக்கிறார்.
இவருக்கு இராணுவப் பின்னணி எதுவும் இல்லை என்றாலும், ரஷ்யாவுக்கு எதிராகச் சண்டையிட விருப்பப்படுவதாக அறிவித்துள்ளார். ஆன்லைனில் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்துக் கருத்துச் சொல்பவராக அறியப்படுகிறார்.
2022ம் ஆண்டு அவரது எக்ஸ் கணக்கில் உக்ரைன் - ரஷ்யா போரில் சண்டையிட விருப்பப்படுவதாகப் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் போர்களில் ஈடுபடுவது குறித்து அவர் பேசிவந்துள்ளார். அவரது வாட்ஸ்அப் பயோவில் "நாம் ஒவ்வொருவரும் தினமும் மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கு நமது பங்கைச் செய்ய வேண்டும்; நாம் ஒவ்வொருவரும் சீனர்களுக்கு உதவ வேண்டும்" என எழுதியிருக்கிறார்.
முன்னதாக பென்சில்வேனியா பகுதியில் ட்ரம்ப் பேரணி நடந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அது குறித்து எக்ஸ் தளத்தில் கமலா ஹாரிஸைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் ரியான்.
அவர், "நீங்களும் பைடனும் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட வேண்டும். மரணமடைந்த தீயணைப்பு வீரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும். ஏனெனில் ட்ரம்ப் அவர்களுக்காக எதுவும் செய்யப்போவதில்லை" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பாக இருக்கிறார் ட்ரம்ப். இது அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி அவர்மீது நடத்தப்படும் இரண்டாவது துப்பாக்கிச்சூடாகும்.